Redditinc_Logo_About Page@2x

வருமானம் ஈட்டல் விதிமுறைகள்

செப்டம்பர் 24, 2024 முதல் அமலில் உள்ளது. செப்டம்பர் 24, 2024 அன்று கடைசியாகத் திருத்தப்பட்டது

வரவேற்கிறோம்! எங்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட Reddit திட்டங்கள் (இவை ஒவ்வொன்றும் ஒரு "ஈட்டுதல் திட்டம்" எனக் குறிப்பிடப்படும்) மூலம் வருமானம் ஈட்டுவதில் நீங்கள் ஆர்வம் காட்டுவது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (“வருமானம் ஈட்டல் விதிமுறைகள்” எனக் குறிப்பிடப்படும்), ஈட்டுதல் திட்டத்தில் உங்கள் பங்கேற்பிற்குப் பொருந்தும் மற்றும் அதைக் கட்டுப்படுத்தும், மேலும் இவை உங்களுக்கும் Reddit-க்கும் இடையே ஒரு ஒப்பந்தமாக அமைகின்றன. இந்த வருமானம் ஈட்டல் விதிமுறைகள் நீங்கள் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட எங்கள் பயனர் ஒப்பந்தம், வணிக விதிமுறைகள், முன்னோட்ட விதிமுறைகள் (ஒட்டுமொத்தமாக, “Reddit விதிமுறைகள்” எனக் குறிப்பிடப்படும்) ஆகியவற்றுடன் கூடுதலாகப் பொருந்தும், மேலும் Reddit விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ள சில விதிமுறைகளையும் உள்ளடக்கியிருக்கும். வருமானம் ஈட்டல் விதிமுறைகளையும் Reddit விதிமுறைகளையும் ஏற்றுக்கொண்டு, ஈட்டுதல் திட்டத்தில் பங்கேற்பதற்கு முன், அவற்றைக் கவனமாகப் படிக்கவும்.

1. ஏற்றுக்கொள்ளுதல்

சேவைகள் வழியாக ஏதேனும் ஈட்டுதல் திட்டத்தில் இணைவதன் மூலம், வருமானம் ஈட்டல் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும், பங்களித்தல், Devvit ஆப்ஸை உருவாக்குதல் (ஒவ்வொன்றும் கீழே வரையறுக்கப்பட்டுள்ளது), பே-அவுட் பெறுதல் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது) ஆகியவற்றின் மூலம், நீங்கள் வருமானம் ஈட்டல் விதிமுறைகளுக்குத் தொடர்ந்து கட்டுப்பட ஒப்புக்கொள்கிறீர்கள். வருமானம் ஈட்டல் விதிமுறைகளை ஏற்கவில்லை என்றால், நீங்கள் எந்தவொரு ஈட்டுதல் திட்டத்திலும் பங்கேற்க முடியாது.

வருமானம் ஈட்டுபவர்கள் சிலரை, மேலாண்மை நிறுவனம், மேலாளர், ஏஜென்சி, ஏஜென்ட், விளம்பரத் தொடர்பாளர் அல்லது பிற தனிநபர்/அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தலாம். நீங்கள் மூன்றாம் தரப்பு (எ.கா. நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம், நீங்கள் அல்லது உங்கள் மேலாண்மை நிறுவனம் பிரதிநிதித்துவப்படுத்துபவர்) சார்பாக வருமானம் ஈட்டல் விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டால், நீங்கள் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி என்றும் அந்த மூன்றாம் தரப்பை வருமானம் ஈட்டல் விதிமுறைகளுக்கு ஒப்புக்கொள்ள வைக்கும் அதிகாரம் உங்களுக்கு உள்ளது என்றும் எங்களுக்கு உறுதிப்படுத்தி உத்தரவாதம் அளிக்கிறீர்கள். அத்துடன், வருமானம் ஈட்டல் விதிமுறைகள் முழுவதும் “நீங்கள்” என்ற சொல்லின் எந்தவொரு பயன்பாடும் அந்த மூன்றாம் தரப்பையே குறிக்கும்.

2. தகுதிபெறும் வருமானம் ஈட்டுபவர்கள்

ஈட்டுதல் திட்டத்தில் பங்கேற்க உங்களைப் பற்றிய தகவல்களையும் (உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி, கணக்கு, ஈமெயில், வரித் தகவல்கள், அரசாங்க அடையாளச் சான்று, பேமெண்ட் விவரங்கள் ஆகியவை இதில் அடங்கலாம்), அத்திட்டத்திற்குத் தேவைப்படும் கூடுதல் தகவல்களையும் (ஒட்டுமொத்தமாக, உங்கள் "வருமானம் ஈட்டுபவர் தகவல்" எனக் குறிப்பிடப்படுகிறது) நீங்கள் வழங்க வேண்டியிருக்கும். நீங்கள் ஈட்டுதல் திட்டத்தில் பங்கேற்கத் தகுதிபெறுகிறீர்களா ("தகுதியான வருமானம் ஈட்டுபவர்") என்பதைத் தீர்மானிக்கவும், சட்டத்திற்கு இணங்கவும் உங்கள் வருமானம் ஈட்டுபவர் தகவலைப் பயன்படுத்துகிறோம்.

பின்வரும் சூழல்களில் நீங்கள் ஈட்டுதல் திட்டத்தில் பங்கேற்கத் தகுதிபெறமாட்டீர்கள்:

  • 18 வயதுக்குக் குறைவானவர் அல்லது நீங்கள் வசிக்கும் நாட்டின் சட்டங்களின்படி சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச வயதுக்குக் குறைவானவர்;

  • நீங்களோ நீங்கள் பணிபுரியும் நிறுவனமோ பொருளாதார அல்லது வர்த்தகத் தடைகள், வணிகத் தடைகள், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் கீழ் பரிவர்த்தனைகள் தடைசெய்யப்பட்ட நபராகவோ தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட தரப்பினரின் ஏதேனும் பட்டியலில் வேறுவகையில் குறிப்பிடப்பட்டவராகவோ இருக்கிறீர்கள், மேற்கூறியவற்றிற்கு உட்பட்ட ஒரு நாட்டில் வசிக்கிறீர்கள் (அல்லது அந்நாட்டின் குடிமகனாக இருக்கிறீர்கள்), அல்லது பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் ஈட்டுதல் திட்டத்தில் பங்கேற்பதிலிருந்தோ சேவைகளைப் பயன்படுத்துவதிலிருந்தோ தடுக்கப்பட்டிருக்கிறீர்கள்;

  • நீங்கள் பதவியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட அரசு அதிகாரியாகவோ, வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் வேட்பாளராகவோ, அரசியல் செயல்பாட்டுக் குழு அல்லது அது போன்ற நிதி திரட்டும் அரசியல் அமைப்பு, அரசு ஏஜென்சி அல்லது துறை ஆகியவற்றைச் சார்ந்தவராகவோ அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவோ இருக்கிறீர்கள்;

  • நீங்கள் Reddit-இன் பயனர் ஒப்பந்தம், வணிக விதிமுறைகள், முன்னோட்ட விதிமுறைகள், வருமானம் ஈட்டல் விதிமுறைகள் அல்லது எங்கள் பல்வேறு சேவைகள் மற்றும் Reddit திட்டங்களுக்கு ( ஈட்டுதல் திட்டங்கள் உட்பட) பொருந்தக்கூடிய பிற கொள்கைகள், விதிமுறைகள், நிபந்தனைகள் ஆகிவற்றை மீறியுள்ளீர்கள் அல்லது மீற முயற்சிக்கிறீர்கள்;

  • நீங்கள் Reddit வருமானம் ஈட்டல் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிபெறும் வருமானம் ஈட்டுபவருக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறுகிறீர்கள்; அல்லது

  • நீங்கள் வருமானம் ஈட்டுபவர் தகவலை எங்களுக்கு வழங்கவில்லை அல்லது நீங்கள் வழங்கிய வருமானம் ஈட்டுபவர் தகவலின் அடிப்படையில், ஈட்டுதல் திட்டத்தில் பங்கேற்பதிலிருந்து உங்கள் வருமானம் ஈட்டுபவர் தகவல் உங்களைத் தகுதிநீக்கம் செய்வதாக Reddit தீர்மானிக்கிறது.

ஈட்டுதல் திட்டத்தில் பங்கேற்பதன் மூலம், நீங்கள் அந்த ஈட்டுதல் திட்டத்தில் பங்கேற்கத் தகுதிபெறுவதையும், அந்த ஈட்டுதல் திட்டம் தொடர்பான வருமானம் ஈட்டல் விதிமுறைகள் மற்றும் அனைத்துக் கூடுதல் விதிமுறைகள் உட்பட, உங்கள் பங்கேற்பிற்குப் பொருந்தக்கூடிய சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதையும் Reddit-க்கு உறுதிப்படுத்தி உத்தரவாதம் அளிக்கிறீர்கள்.

ஈட்டுதல் திட்டத்தில் பங்கேற்கத் தகுதிபெறுவது முழுக்க முழுக்க Reddit-இன் முடிவுக்கு உட்பட்டது; மேலும், Reddit எப்போது வேண்டுமானாலும் ஈட்டுதல் திட்டத்திற்கான தேவைகளை மாற்றலாம். எந்த நேரத்திலும், எந்தக் காரணத்திற்காகவும் காரணமில்லாமலும் எங்கள் தனிப்பட்ட விருப்பத்தின்படி, முன்னறிவிப்போ Reddit-க்கு எவ்விதப் பொறுப்போ இன்றி, ஈட்டுதல் திட்டங்கள் தொடர்பானவை உட்பட, சேவைகளுக்கான அணுகலைத் தடுக்க, இடைநிறுத்த, கட்டுப்படுத்த அல்லது முடிவுக்குக் கொண்டுவர Reddit-க்கு உரிமை உள்ளது (பொருந்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டது).

3. ஈட்டுதல் திட்டங்கள்

3.1 மேலோட்டம்

Reddit தற்போது பங்களிப்பாளர்கள், டெவலப்பர்கள் மற்றும் கிரியேட்டர்களுக்கு ஈட்டுதல் திட்டங்களை வழங்குகிறது. இந்த வருமானம் ஈட்டல் விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, ஒவ்வொரு ஈட்டுதல் திட்டத்திற்கும் ஈட்டுதலைக் கணக்கிடும் விதத்திற்கும் ("ஈட்டுதல்") மற்றும் தகுதிபெறும் வருமானம் ஈட்டுபவர் Reddit-இல் இருந்து தனது பே-அவுட்டைப் பெறலாமா, எப்போது பெறலாம் ("பே-அவுட் தேவைகள் ") என்பதற்கும் தனித் தேவைகள் உள்ளன.

ஈட்டுதல் திட்டத்திற்கான அனைத்துக் கூடுதல் விதிமுறைகளும், இந்தக் குறிப்பின் மூலம் வருமானம் ஈட்டல் விதிமுறைகளில் இணைக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியாக ஆக்கப்படுகின்றன. இந்த வருமானம் ஈட்டல் விதிமுறைகளுடன் ஏதேனும் கூடுதல் விதிமுறைகள் முரண்படும் பட்சத்தில், தொடர்புடைய ஈட்டுதல் திட்டத்தில் உங்கள் பங்கேற்பைப் பொறுத்தவரை அந்த கூடுதல் விதிமுறைகளே நடைமுறையில் இருக்கும்.

3.2 பங்களிப்பாளர் திட்டம்

Reddit-இன் சேவைகள், உங்கள் கணக்கிலிருந்து உள்ளடக்கத்தை (தகவல்கள், உரை, இணைப்புகள், வரைபடங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ, ஸ்ட்ரீம்கள், மென்பொருள், கருவிகள், பிற பொருட்கள் உட்பட) சமூகத்திற்கும் பிற ரெடிட்டர்களுக்கும் வழங்க அனுமதிக்கின்றன (ஒட்டுமொத்தமாக, உங்கள் "பங்களிப்புகள்" எனக் குறிப்பிடப்படும்). மற்ற ரெடிட்டர்கள் உங்கள் பங்களிப்புகளுக்கு அப்வோட் செய்வதன் மூலமும், சேவைகள் வழியாக விருதுகளை வழங்குவதன் மூலமும் உங்களைக் கௌரவிக்க விரும்பலாம், இதனால் நீங்கள் கர்மா மற்றும்/அல்லது கோல்டு பெறுவீர்கள்.

எங்கள் பங்களிப்பாளர் திட்டத்தின் ஒரு பகுதியாக, நீங்கள் தகுதிபெறும் வருமானம் ஈட்டுபவராக இருந்தால் வருமானம் ஈட்டல் விதிமுறைகள், எங்கள் வருமானம் ஈட்டல் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் பங்களிப்புகளுக்கு Reddit பேமெண்ட் வழங்கலாம் (உங்கள் "பங்களிப்பாளர் வருமானங்கள்"). இருப்பினும், இந்த ஈட்டுதல் திட்டத்தின் கீழ் பங்களிப்பாளர் வருமானங்களைப் பெறுவதற்கு, உங்கள் கணக்கிலிருந்து (நீங்கள் நிர்வகிக்கும் வேறு எந்தக் கணக்கிலிருந்தும் அல்ல) செய்யப்படும் பங்களிப்புகள் மட்டுமே தகுதிபெறும். இத்தகைய பங்களிப்புகள் பதிவிடப்படும்போதும் பே-அவுட் பெறும்போதும், பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்கள், வருமானம் ஈட்டல் விதிமுறைகள், எங்கள் வருமானம் ஈட்டல் கொள்கை ஆகியவற்றுக்கு இணங்க வேண்டும்(“தகுதிபெறும் பங்களிப்புகள்”). சமூகத்திற்கான தகுதியான உங்கள் பங்களிப்புகளின் தரத்தின் அடிப்படையில் உங்கள் பங்களிப்பாளர் வருமானங்கள் தீர்மானிக்கப்படும். இந்தத் தரம் இங்கே விவரிக்கப்பட்டுள்ளபடி நீங்கள் முதன்முதலில் கோல்டு பெற்ற நாளிலிருந்து தொடங்கி கடந்த 12 மாதங்களுக்குள் நீங்கள் ஈட்டிய கர்மாவின் அளவு மற்றும் முந்தைய மாதத்தில் தகுதிபெறும் பங்களிப்புகளால் நீங்கள் பெற்ற கோல்டு மூலம் அளவிடப்படுகிறது (உங்கள் “பங்களிப்பாளர் நிலை”). நீங்கள் இங்கே விவரிக்கப்பட்டுள்ள சில குறைந்தபட்ச வரம்புகளை(“குறைந்தபட்சப் பங்களிப்பாளர் நிலை”) பூர்த்தி செய்யாத வரை Reddit உங்களுக்குப் பே-அவுட்டைத் தொடங்காது (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது). பங்களிப்பாளர் வருமானங்களுக்கான தற்போதைய பே-அவுட் விகிதம் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது) பற்றி நீங்கள் இங்கே மேலும் தெரிந்துகொள்ளலாம்.

தகுதியான பங்களிப்புகளிலிருந்து கிடைக்கும் கோல்டு, நீங்கள் குறைந்தபட்சப் பங்களிப்பாளர் நிலையை அடையும் வரை தொடரும். இருப்பினும், உங்கள் கணக்கு 12 மாத காலத்திற்குச் செயலற்றதாக இருந்தால், உங்கள் கணக்குடன் தொடர்புடைய பங்களிப்பாளர் வருமானங்கள் அனைத்தையும் நீங்கள் இழக்க நேரிடும்.

3.3 டெவலப்பர் திட்டம்

Reddit-இன் டெவலப்பர் தளம் (அல்லது “Devvit”), சமூகத்திற்கும் பிற ரெடிட்டர்களுக்கும் Devvit ஆப்ஸை (எங்கள் டெவலப்பர் விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ளபடி) வழங்க உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் தகுதியான வருமானம் ஈட்டுபவராக இருந்து, உங்கள் Devvit ஆப்ஸ் மற்றும் Devvit பொருட்கள் எங்கள் டெவலப்பர் விதிமுறைகள், Devvit வழிகாட்டுதல்கள், வருமானம் ஈட்டல் விதிமுறைகள், வருமானம் ஈட்டல் கொள்கை (“தகுதிபெறும் Devvit ஆப்ஸ்”, “தகுதிபெறும் Devvit பொருட்கள்”) ஆகியவற்றின்படி பேமெண்ட் பெறத் தகுதிபெற்றால், நீங்கள்: 1) தகுதிபெறும் உங்கள் Devvit பொருட்களை கோல்டு பயன்படுத்தி பிற ரெடிட்டர்கள் வாங்கும்படி செய்யலாம்; மற்றும் 2) எங்கள் டெவலப்பர் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பணம் சம்பாதிக்கலாம்.

Devvit ஆப்ஸ் Reddit-இன் டெவலப்பர் தளத்தில் ஹோஸ்ட் செய்யப்படுவதால், கோல்டு பயன்படுத்தி தகுதியான Devvit ஆப்ஸிலிருந்து தகுதியான Devvit பொருட்களை ரெடிட்டர்கள் பெறுவதற்கு வழிவகை செய்ய, சில வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளது. தகுதியான உங்கள் Devvit ஆப்ஸிலிருந்து கோல்டு பயன்படுத்தி, தகுதியான Devvit பொருட்களை ரெடிட்டர்கள் பெற்றுக்கொள்ள உதவும் வகையில் Devvit மற்றும் பிற சேவைகள் மூலம் Reddit சில வருமானம் ஈட்டல் கருவிகளை வழங்குகிறது (ஒட்டுமொத்தமாக, “Devvit ஈட்டுதல் சேவைகள்” எனக் குறிப்பிடப்படும்). Devvit ஈட்டுதல் சேவைகளைப் பெறுவதற்காக, Devvit மற்றும் எங்கள் சேவைகள் மூலம் ரெடிட்டர்களிடமிருந்து உங்கள் சார்பாக கோல்டைச் சேகரிக்கவும் செயலாக்கவும் Reddit-ஐ உங்கள் ஏஜென்ட்டாக நியமிக்கிறீர்கள். தகுதியான உங்கள் Devvit ஆப்ஸ் மற்றும் தகுதியான Devvit பொருட்கள் பற்றிய தகவல்களை Reddit அவ்வப்போது கோரலாம் என்பதையும், நீங்கள் Reddit-க்கு அந்தத் தகவல்களை வழங்குவீர்கள் என்பதையும் ஒப்புக்கொள்கிறீர்கள்.

ரெடிட்டர்கள் தகுதியான Devvit பொருட்களைப் பெற கோல்டு பயன்படுத்துவதால், தகுதியான உங்கள் Devvit ஆப்ஸிலிருந்து தகுதியான Devvit பொருட்களைப் பெற அவர்கள் பயன்படுத்திய கோல்டுக்கு இணையான தொகையை (உங்கள் "டெவலப்பர் வருமானங்கள்"), தற்போதைய பே-அவுட் விகிதத்தில் பெறுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. எங்களின் தற்போதைய பே-அவுட் விகிதங்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ள, எங்கள் உதவி மையத்தைப் பாருங்கள்.

உங்கள் Devvit பொருட்கள் தகுதிபெறும் Devvit பொருட்களாவதற்கு, உங்கள் Devvit ஆப்ஸிற்குப் பயன்பாட்டு விதிமுறைகள் இருக்க வேண்டும். அத்துடன், அந்தப் பயன்பாட்டு விதிமுறைகளிலோ உங்கள் Devvit ஆப்ஸின் பிற பகுதியிலோ உங்கள் Devvit பொருட்களைப் பற்றி முழுமையாகவும் துல்லியமாகவும் விவரிக்க வேண்டும். இந்த விளக்கத்தில் குறைந்தபட்சம் இவை இருக்க வேண்டும்: கோல்டில் விலை, Devvit பொருட்களின் விவரம், Devvit பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் Devvit பொருட்களுக்கு நீங்கள் விதிக்கும் தகுதிநிலைத் தேவைகள் அல்லது நிபந்தனைகள். உங்கள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் ரெடிட்டர்களுக்கு உங்கள் Devvit பொருட்களை வழங்குவதற்கு நீங்களே முழுப் பொறுப்பாவீர்கள்.

உங்கள் Devvit ஆப்ஸ் மற்றும் Devvit பொருட்கள் எங்கள் டெவலப்பர் விதிமுறைகள், Devvit வழிகாட்டுதல்கள், வருமானம் ஈட்டல் விதிமுறைகள், வருமானம் ஈட்டல் கொள்கை, பிற Reddit விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களுக்கும் இணங்குவதையும் நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். உங்கள் Devvit ஆப்ஸ் அல்லது Devvit பொருட்கள் எங்கள் டெவலப்பர் விதிமுறைகள், Devvit வழிகாட்டுதல்கள், வருமானம் ஈட்டல் விதிமுறைகள், வருமானம் ஈட்டல் கொள்கை, பிற Reddit விதிமுறைகள் அல்லது பொருந்தக்கூடிய சட்டங்களை மீறுவதாக நாங்கள் எங்கள் தனிப்பட்ட விருப்பத்தின்படி தீர்மானித்தால், உங்கள் Devvit பொருட்களை நீக்குவதற்கும், உங்கள் பே-அவுட்களை (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) நிறுத்தி வைப்பதற்கும், உங்கள் கணக்கை இடைநிறுத்துவதற்கும் அல்லது தடைசெய்வதற்கும் Reddit-க்கு உரிமை உள்ளது.

Reddit-இன் வணிக விதிமுறைகள் மற்றும் முன்னோட்ட விதிமுறைகள் (எங்கள் திருப்பியளித்தல் கொள்கை உட்பட) உங்கள் Devvit பொருட்களுக்குப் பொருந்தும். கோல்டு பயன்படுத்தி உங்கள் Devvit பொருட்களைப் பெறும் ரெடிட்டர்கள், பிரச்சனைகளை நேரடியாகத் தீர்த்துக்கொள்ள உங்களைத் தொடர்புகொள்வதற்கான வழிமுறையை நீங்கள் வழங்க வேண்டும். அத்தகைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நீங்களே (Reddit அல்ல) பொறுப்பாவீர்கள். அத்தகைய பிரச்சனையை உங்களால் தீர்க்க முடியாதபோது, விவரித்தபடி Devvit பொருட்களை நீங்கள் ரெடிட்டர்களுக்கு வழங்கவில்லை என்று Reddit கருதினால், உங்கள் சார்பாகப் பயனர்களுக்கு நேரடியாக கோல்டைத் திருப்பியளித்துவிட்டு அதற்கேற்ப உங்கள் டெவலப்பர் வருமானங்களை நாங்கள் குறைக்கலாம். பிரச்சனைகளைக் கையாள்வது எப்படி என்பது குறித்த கூடுதல் வழிகாட்டுதலுக்கு, எங்கள் Devvit வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்.

3.4 கிரியேட்டர் திட்டம்

Reddit-இன் கிரியேட்டர் போர்ட்டல் (எங்கள் கிரியேட்டர் விதிமுறைகள் வரையறையின்படி), சேவைகள் மூலம் கலெக்டிபிள் அவதார்களை மற்ற ரெடிட்டர்களுக்கு விற்பதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் தகுதிபெறும் வருமானம் ஈட்டுபவராக இருந்து, எங்கள் கிரியேட்டர் விதிமுறைகளின்படி கலெக்டிபிள் அவதார்களை விற்பனை செய்தால், கிரியேட்டர் வருமானங்களை (எங்கள் கிரியேட்டர் விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ளபடி) பெற நீங்கள் தகுதிபெறலாம். கிரியேட்டர் திட்டம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, எங்கள் கிரியேட்டர் விதிமுறைகளைப் பார்க்கவும்.

4. பே-அவுட் விதிமுறைகள்

4.1 பே-அவுட் நேரம் மற்றும் பே-அவுட் விகிதம்

நீங்கள் தகுதிபெறும் வருமானம் ஈட்டுபவராக இருந்து, பே-அவுட் தேவைகளைப் பூர்த்தி செய்திருந்தால், பொருந்தக்கூடிய ஈட்டுதல் திட்டங்களின் கீழ் Reddit-இல் உங்கள் ஈட்டுதலுக்கான பே-அவுட்டைப் பெற நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள் (இது ஒவ்வொன்றும் “பே-அவுட்” எனக் குறிப்பிடப்படுகிறது). பே-அவுட் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்த மாதத்தின் முடிவிலிருந்து மாதந்தோறும் பே-அவுட் செய்யப்படும், பொதுவாக அந்த மாதம் முடிவடைந்த 45 நாட்களுக்குள் செய்யப்படும். உதாரணமாக, அக்டோபர் 18 அன்று நீங்கள் பே-அவுட் தேவைகளைப் பூர்த்தி செய்திருந்தால், பொதுவாக அக்டோபர் 31-க்குப் பிறகு 45 நாட்களுக்குள் Reddit உங்களுக்குப் பேமெண்ட் செய்யும்.

பின்வரும் நிபந்தனைகளை Reddit தனது விருப்பத்தின் பேரில் உறுதிப்படுத்தினால் மட்டுமே உங்களுக்குப் பே-அவுட் செய்யப்படும்: 1) நீங்கள், உங்கள் கணக்கு, பே-அவுட் உடன் தொடர்புடைய உங்கள் பங்களிப்புகள், Devvit பொருட்கள் மற்றும்/அல்லது கலெக்டிபிள் அவதார்கள் ஆகியவை பொருந்தக்கூடிய ஈட்டுதல் திட்டத்தின் கீழ் ஈட்டுதலுக்குத் தகுதிபெற வேண்டும்; மற்றும் 2) வருமானம் ஈட்டல் விதிமுறைகள், வருமானம் ஈட்டல் கொள்கை மற்றும் பொருந்தக்கூடிய பிற Reddit விதிமுறைகளுக்கு இணங்க உங்கள் ஈட்டுதலுக்குத் தொடர்புடைய பே-அவுட் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

நீங்கள் கோல்டு ஈட்டக்கூடிய ஈட்டுதல் திட்டத்தில் பங்கேற்று அதற்கான பே-அவுட்டைப் பெறுவதன் மூலம், தகுதியான பங்களிப்புகள் அல்லது தகுதியான Devvit பொருட்களுக்காக நீங்கள் பெற்ற தங்கத்தை அந்தத் திட்டத்திற்கு Reddit நிர்ணயித்துள்ள அப்போதைய பே-அவுட் விகிதத்தில் பணமாக மாற்றிக்கொள்ள ஒப்புக்கொள்கிறீர்கள் (“பே-அவுட் விகிதம்”). ரிடீம் செய்தவுடன், பொருந்தக்கூடிய பே-அவுட் விகிதத்தின் அடிப்படையில் உங்களுக்குப் பணமாக வழங்கும்போது, Reddit நீங்கள் ஈட்டிய கோல்டைக் கழிக்கும். மேலும், அந்த ஈட்டுதல் திட்டத்திற்கான வருமானம் ஈட்டல் விதிமுறைகள் அல்லது கூடுதல் விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ள பொருந்தக்கூடிய கட்டணங்களையும் பே-அவுட்டில் இருந்து கழித்துவிடும். வருமானம் ஈட்டல் விதிமுறைகள், வருமானம் ஈட்டல் கொள்கை அல்லது பிற Reddit விதிமுறைகளை நீங்கள் மீறியுள்ளதாகவோ மீறக்கூடும் என்றோ நாங்கள் நியாயமாகக் கருதினால், பே-அவுட்டைத் தொடங்க மறுப்பதற்கான உரிமை Reddit-க்கு உள்ளது. எந்தவொரு ஈட்டுதல் திட்டம் தொடர்பாகவும் ஒரு நேரத்தில் நீங்கள் எவ்வளவு தொகையை ஈட்டலாம் என்பது குறித்து Reddit எந்தவிதமான பிரதிநிதித்துவங்களையோ, உத்தரவாதங்களையோ உறுதிமொழிகளையோ அளிக்கவில்லை, மேலும் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு செயலுக்கும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.

சம்பந்தப்பட்ட பே-அவுட் செய்யப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் எங்களைத் தொடர்புகொண்டு அது குறித்த முரண்பாட்டை Reddit-க்குத் தெரிவிக்காத பட்சத்தில், அந்தப் பே-அவுட் துல்லியமாக இருப்பதாக நீங்கள் ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும்.

4.2 பேமெண்ட் பார்ட்னர் ஆன்போர்டிங் மற்றும் கட்டணங்கள்

பே-அவுட் பெறுவதற்கு Reddit தேர்ந்தெடுத்த பேமெண்ட் பார்ட்னரிடம் பதிவுசெய்ய ஒப்புக்கொள்கிறீர்கள், இந்தப் பார்ட்னரைத் தனிப்பட்ட விருப்பத்தின்படி Reddit மாற்றக்கூடும். Reddit தேர்ந்தெடுத்த பேமெண்ட் சேவை வழங்குநரைத் தவிர வேறு எதையும் நீங்கள் பயன்படுத்தக்கூடாது. Reddit உங்களுக்கு வழங்க வேண்டிய பே-அவுட்கள் அனைத்தும் எங்கள் பேமெண்ட் பார்ட்னர் மூலமாக வழங்கப்படும்.

பேமெண்ட் பார்ட்னர் மூலம் பே-அவுட்களைப் பெற, வருமானம் ஈட்டுபவர் தகவல் அல்லது தேவையான பிற தகவல்களை எங்கள் பேமெண்ட் பார்ட்னருக்கும் Reddit-க்கும் நீங்கள் வழங்க வேண்டும், எ.கா., முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனத்தில் உள்ள உங்கள் வங்கிக் கணக்கின் தகவல்கள் மற்றும் IRS படிவம்  W-9 or W-8BEN (அல்லது எங்கள் பேமெண்ட் பார்ட்னர் மற்றும் Reddit ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று வரிப் படிவங்கள்).

தேவையான தகவல்கள் அனைத்தையும் எங்கள் பேமெண்ட் பார்ட்னருக்கும் Reddit-க்கும் வழங்கவில்லை என்றால் உங்களுக்கு வர வேண்டிய பே-அவுட்டைப் பெற முடியாமல் போகக்கூடும். நீங்கள் இந்தத் தகவலை வழங்கத் தவறியதன் காரணமாக பே-அவுட்டைப் பெற முடியவில்லை என்றால், அதனால் ஏற்படும் சேதங்கள், தாமதங்கள், நஷ்டங்கள், செலவுகள், செலவினங்கள், பொறுப்புகள் ஆகிய எதற்கும் Reddit பொறுப்பேற்காது.

Reddit எந்தவொரு பேமெண்ட் பார்ட்னரையும் இயக்குவதில்லை, அதன் உரிமையாளராக இல்லை அல்லது அதைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதையும், பேமெண்ட் பார்ட்னரின் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது அந்தப் பேமெண்ட் பார்ட்னரின் விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளுக்கு உட்பட்டது என்பதையும் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். பேமெண்ட் பார்ட்னர், வேறு ஏதேனும் மூன்றாம் தரப்பு, தவிர்க்க முடியாத நிகழ்வுகள், எங்கள் பேமெண்ட் பார்ட்னரிடம் கணக்கை உரிய நேரத்தில் அல்லது முறையாக உருவாக்கத் தவறுதல், பே-அவுட் செய்வதற்காக கோரப்பட்ட தகவல்களை வழங்கத் தவறுதல் ஆகியவற்றால் ஏற்படும் தாமதம், தோல்வி, சேதம், கடமை ஆகியவற்றிற்கு நாங்கள் பொறுப்பல்ல என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எங்கள் பேமெண்ட் பார்ட்னர்கள் இந்தத் திட்டம் தொடர்பான எந்தவொரு பே-அவுட்டிற்கும் பரிவர்த்தனைக் கட்டணங்களை வசூலிக்கக்கூடும். இந்தக் கட்டணங்களை எங்கள் பேமெண்ட் பார்ட்னர்கள் வசூலிக்கிறார்கள், நாங்கள் அல்ல; மேலும், தேர்ந்தெடுக்கப்படும் பேமெண்ட் முறையைப் பொறுத்து இவை மாறுபடும். உங்கள் பே-அவுட்கள் தொடர்பான பரிவர்த்தனைக் கட்டணங்களை எங்கள் பேமெண்ட் பார்ட்னர்கள் வசூலித்தால், அந்தக் கட்டணங்களை உங்கள் பே-அவுட் தொகையிலிருந்து கழித்துக்கொள்ள Reddit-க்கு உரிமை உள்ளது.

4.3 பே-அவுட் நாணயம்

Reddit உங்களுக்கான அனைத்துப் பே-அவுட்களையும் இயல்பாகவே அமெரிக்க டாலர்களில் வழங்கும். பொருந்தக்கூடிய சட்டம் அல்லது பிற காரணங்களால் (எ.கா., அதிகப்படியான அந்நியச் செலாவணி மாற்று விகிதங்கள்), சில நாடுகள், நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு Reddit மற்றும் எங்கள் பேமெண்ட் பார்ட்னர்களால் பே-அவுட் செய்ய முடியாமல் போகலாம். அமெரிக்க டாலர் அல்லாத, ஆனால் நாங்கள் ஆதரிக்கும் ஒரு நாணயத்தில் பே-அவுட் பெற நீங்கள் தேர்வுசெய்தால், உங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை Reddit அல்லது எங்கள் பேமெண்ட் பார்ட்னர் தீர்மானிக்கும் பரிமாற்ற விகிதத்தில் Reddit மாற்றும்; இந்த விகிதத்தில் அடங்கும் பரிமாற்றக் கட்டணங்கள் மற்றும் செலவுகளை உங்கள் பே-அவுட் தொகையிலிருந்து கழித்துக்கொள்ள Reddit-க்கு உரிமை உள்ளது.

4.4 Reddit உரிமைகள்

பின்வரும் சூழல்களில் உங்களிடமிருந்து பேமெண்ட்டைத் திரும்பப் பெறவோ, ஈட்டுதல் திட்டத்தின் கீழ் உங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய வருமானங்களில் இருந்து அவற்றைக் கழிக்கவோ, ஈடுசெய்யவோ Reddit-க்கு உரிமை உண்டு: 1) ஏதேனும் காரணத்திற்காக Reddit உங்களுக்கு வழங்கிய கூடுதல் பேமெண்ட்டுகள், 2) Reddit ஏற்கெனவே செய்த அல்லது செய்யவிருக்கும் பே-அவுட் உடன் தொடர்புடைய உங்கள் பங்களிப்புகள், Devvit பொருட்கள் அல்லது கலெக்டிபிள் அவதார்கள் தொடர்பான ஏதேனும் கோரிக்கை, பிரச்சனை, பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது பரிவர்த்தனை ரத்துக் கோரிக்கை; மற்றும் 3) வருமானம் ஈட்டல் விதிமுறைகள் அல்லது பொருந்தக்கூடிய ஈட்டுதல் திட்டத்தின் கூடுதல் விதிமுறைகளின் கீழ் Reddit அல்லது அதன் பேமெண்ட் பார்ட்னர்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களைக் குறைவாகச் செலுத்தியிருந்தால் அந்தத் தொகை. அந்தத் தொகைக்கு Reddit உங்களுக்கு எந்த வட்டியும் செலுத்த வேண்டியதில்லை, மேலும் அந்தத் தொகையை எங்களுக்குச் செலுத்துமாறு உங்களிடம் கோரக்கூடும்.

மேலும், ஈட்டுதல் திட்டத்திலோ அது தொடர்பாகவோ மோசடி, பணமோசடி அல்லது சட்டம், ஒழுங்குமுறை, வருமானம் ஈட்டல் விதிமுறைகள் ஆகியவற்றின் மீறல் நடைபெறுவதாக எங்கள் தனிப்பட்ட விருப்பத்தின்படி நாங்கள் கருதினால், அவை நாங்கள் நியாயமாகத் திருப்தியடையும் வகையில் தீர்க்கப்படும் வரை, அந்த மீறலுடன் தொடர்புடையதாக எங்கள் தனிப்பட்ட விருப்பத்தின்படி நாங்கள் கருதும் எந்தவொரு பேமெண்ட்டையும் நிறுத்திவைக்கவோ, தாமதப்படுத்தவோ, திரும்பப் பெறவோ எங்களுக்கு உரிமை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்.

4.5 வரிகள்

ஈட்டுதலின் விளைவாகச் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்துவதற்கு நீங்களே பொறுப்பு என்பதையும், உங்களுக்குச் செலுத்தப்படும் ஈட்டுதலில் சட்டப்படி நாங்கள் பிடித்தம் செய்யவோ நிறுத்திவைக்கவோ கடமைப்பட்டிருக்கும் வரிகளை நாங்கள் பிடித்தம் செய்யவோ நிறுத்திவைக்கவோ கூடும் என்பதையும் ஒப்புக்கொள்கிறீர்கள். ஈட்டுதல் திட்டத்தின் கூடுதல் விதிமுறைகளில் வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி, உங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய அனைத்து வருமானங்களையும் நீங்கள் எங்களுக்கு வழங்கிய சேவைகளுக்கான கட்டணமாகவே Reddit கருதுகிறது, பொருந்தினால் சட்டப்படி தேவைப்படும் தகவல் அறிக்கையிடல் நடைமுறைகளையும் மேற்கொள்ளும். ஈட்டுதல் திட்டம் தொடர்பான தகவல் அறிக்கையிடல் அல்லது வரி சார்ந்த கடமைகளை நிறைவேற்றுவதற்கு, நாங்கள் கேட்கும் கூடுதல் தகவல்களை வழங்கவும், எங்களுடன் ஒத்துழைக்கவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.

4.6 பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட வருமானம் ஈட்டுபவர்கள்

நீங்கள் வருமானம் ஈட்டுபவரின் சார்பாக இந்த வருமானம் ஈட்டல் விதிமுறைகளை ஏற்கும் மேலாண்மை நிறுவனம், ஏஜென்சி அல்லது அது போன்ற தனிநபராகவோ நிறுவனமாகவோ இருந்தால், பேமெண்ட் தொடர்பான ஏற்பாடுகள் உட்பட, அந்த வருமானம் ஈட்டுபவருக்கும் உங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கு நீங்களே முழுப் பொறுப்பாவீர்கள்; இதற்கு Reddit பொறுப்பேற்காது அல்லது கடமைப்பட்டிருக்காது (வருமானம் ஈட்டுபவருக்கும் அவரது மேலாளர், ஏஜென்ட் அல்லது பிற பிரதிநிதிக்கும் இடையிலான இத்தகைய ஒப்பந்தம் "மேலாண்மை ஒப்பந்தம்" என்று குறிப்பிடப்படுகிறது). மாறாக, நீங்கள் வேறொரு நபர் அல்லது நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் அல்லது பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வருமானம் ஈட்டுபவர் என்றால், பேமெண்ட் தொடர்பான ஏற்பாடுகள் உட்பட, பொருந்தக்கூடிய மேலாண்மை ஒப்பந்தத்தின் விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கு நீங்களே முழுப் பொறுப்பாவீர்கள்; இதற்கு Reddit பொறுப்பேற்காது அல்லது கடமைப்பட்டிருக்காது.

5. மாற்றுதல் அல்லது நிறுத்துதல்

எப்போது வேண்டுமானாலும், எந்தக் காரணத்திற்காகவும் வருமானம் ஈட்டல் விதிமுறைகள், வருமானம் ஈட்டல் கொள்கை ஆகியவற்றைப் புதுப்பிப்பதன் மூலம், ஈட்டுதல் திட்டத்தை மாற்றியமைத்தல், திருத்துதல், ரத்து செய்தல்; ஈட்டுதல் திட்டத்தில் தேவைகள், கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளைச் சேர்த்தல், அகற்றுதல் அல்லது மாற்றியமைத்தல்; மேலும், பே-அவுட் விகிதம் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்களை மாற்றுதல் ஆகியவற்றைச் செய்ய Reddit-க்கு உரிமை உள்ளது. இன்று ஒரு ஈட்டுதல் திட்டத்தை வழங்குகிறோம் என்பதற்காக, எதிர்காலத்திலும் அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து வழங்க வேண்டிய கடமை Reddit-க்கு இல்லை; மேலும், ஈட்டிய வருமானத்தை எதிர்காலத்தில் பணமாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை. உங்கள் வருவாய் மற்றும் கணக்குச் செயல்பாடுகளின் உண்மைத்தன்மையை மதிப்பிடுவதற்காக, உங்கள் பங்களிப்புகள், Devvit பொருட்கள், Devvit ஆப்ஸ், கலெக்டிபிள் அவதார்கள் (ஒட்டுமொத்தமாக, "ஈட்டுதல் பங்களிப்புகள்" எனக் குறிப்பிடப்படும்) ஆகியவற்றை மதிப்பாய்வு செய்யவும்; வருமானம் ஈட்டல் விதிமுறைகள், வருமானம் ஈட்டல் கொள்கை அல்லது பிற Reddit விதிமுறைகளை (அவற்றின் நோக்கத்தையும் சேர்த்து) நீங்கள் மீறியுள்ளதாகவோ, உங்கள் ஈட்டுதல் பங்களிப்புகள், ஈட்டுதல் திட்டத்தின் கீழ் ஈட்டுதலைப் பெறுவதற்குத் தகுதிபெறவில்லை என்றோ நாங்கள் கருதினால், உங்கள் ஈட்டுதலைத் திரும்பப் பெறவோ, சரிசெய்யவோ, ஈடுசெய்யவோ எங்களுக்கு உரிமை உள்ளது.

6. உங்கள் உறுதிமொழிகள் மற்றும் உத்தரவாதங்கள்

நீங்கள் பின்வருபவற்றை உறுதிப்படுத்துகிறீர்கள், உத்தரவாதம் அளிக்கிறீர்கள், ஏற்றுக்கொள்கிறீர்கள் மற்றும் ஒப்புக்கொள்கிறீர்கள்:

  • வருமானம் ஈட்டல் விதிமுறைகள், வருமானம் ஈட்டல் கொள்கை ஆகியவற்றின் கீழ் உள்ள Reddit-இன் தகுதிநிலை நிபந்தனைகளுக்கு இணங்க, நீங்கள் விண்ணப்பிக்கும் எந்தவொரு ஈட்டுதல் திட்டத்திலும் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளீர்கள்; மேலும், வருமானம் ஈட்டல் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு வருமானம் ஈட்டல் விதிமுறைகள், வருமானம் ஈட்டல் கொள்கை ஆகியவற்றின் தாக்கங்களை நீங்கள் படித்துப் புரிந்துகொண்டுள்ளீர்கள்;

  • 1) உங்கள் ஈட்டுதல் பங்களிப்புகளுக்கு நீங்களே முழு மற்றும் பிரத்தியேக உரிமையாளராக இருக்கிறீர்கள் அல்லது அவற்றைப் பயன்படுத்துவதற்குத் தேவையான உரிமைகளையும் அனுமதிகளையும் பெற்றுள்ளீர்கள், 2) உங்கள் ஈட்டுதல் பங்களிப்புகள் மூன்றாம் தரப்பின் உரிமைகளை (அறிவுசார் சொத்துரிமைகள் உட்பட) மீறவோ, தவறாகப் பயன்படுத்தவோ அல்லது வேறுவிதமாக மீறவோ இல்லை, 3) வருமானம் ஈட்டல் விதிமுறைகள், Reddit விதிமுறைகள் அல்லது அவற்றின் கீழ் நீங்கள் வழங்கிய உரிமங்களுடன் முரண்படும் வகையில் உங்கள் ஈட்டுதல் பங்களிப்புகளுக்கு நீங்கள் எந்த உரிமைகளையும் உரிமங்களையும் வழங்கவில்லை, 4) எந்தவொரு சட்டத்தையும் மீறாமல் உங்கள் ஈட்டுதல் பங்களிப்புகளில் உரிமைகளைப் பெற்றுள்ளீர்கள், மேலும் வருமானம் ஈட்டல் விதிமுறைகள், அவற்றின் கீழ் நீங்கள் வழங்கிய உரிமங்கள் மற்றும் Reddit விதிமுறைகளுக்கு இணங்க Reddit நிறுவனங்களால் உங்கள் ஈட்டுதல் பங்களிப்புகள் பயன்படுத்தப்படுவதால் மீறப்படக்கூடிய எந்தவொரு பொருந்தக்கூடிய அங்கீகார விதிமுறைகள் அல்லது அணுகல் நிபந்தனைக்கும் நீங்கள் உட்பட்டவர் அல்ல, மற்றும் 5) உங்கள் ஈட்டுதல் பங்களிப்புகளில், எங்கள் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்ட Reddit-இன் அறிவுசார் சொத்துக்களோ மூன்றாம் தரப்பினரின் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்ட அறிவுசார் சொத்துக்களோ (உதாரணமாக, பிரபலமான ஆளுமைகளின் பெயர்கள் உட்பட) இல்லை;

  • 1) உங்கள் ஈட்டுதல் பங்களிப்புகள் எந்தவொரு சங்கம், தொழிற்சங்கம், கூட்டுப் பேர ஒப்பந்தம் அல்லது அதுபோன்ற ஒப்பந்தத்தின் கீழ் வராது, அவ்வாறு சேர்க்கப்படுவதற்கான நோக்கமும் இல்லை; மேலும் வருமானம் ஈட்டல் விதிமுறைகளின் கீழ் Reddit உங்களுக்கு வழங்கும் எந்தவொரு பேமெண்ட் தொடர்பாகவும் அல்லது ஈட்டுதல் திட்டத்தில் உங்கள் பங்கேற்பு தொடர்பாகவும், Reddit-இல் இருந்து உங்களுக்கோ, மூன்றாம் தரப்பினர், சங்கம், தொழிற்சங்கம், நிர்வாகம், ஏஜென்ட் அல்லது எந்தவொரு கூட்டுப் பேர ஒப்பந்தத்தின்படியோ மீதமுள்ள அல்லது வேறு வகையான எந்தவொரு பேமெண்ட்டும் செலுத்தப்படாது, 2) ஈட்டுதல் திட்டம் தொடர்பாக நீங்கள் ஈட்டிய வருமானம் அல்லது உங்களுக்கு வழங்கப்பட்ட பேமெண்ட்கள் தொடர்பாக மூன்றாம் தரப்பினருக்கு (எந்தவொரு மேலாண்மை நிறுவனம், மேலாளர், ஏஜென்ட், வழக்கறிஞர், பிரதிநிதி அல்லது சேவை வழங்குநர் உட்பட) அல்லது அவர்கள் தொடர்பாக நீங்கள் செலுத்த வேண்டிய எந்தவொரு கட்டணங்கள், கமிஷன்கள், செலவுகள், செலவினங்கள் அல்லது வேறு எந்த வகையான பேமெண்ட்டுகளுக்கும் Reddit பொறுப்பேற்காது, மேலும் உங்கள் பேமெண்ட்டுகளில் பிடித்தம் செய்யாது, மற்றும் 3) பங்களிப்புகள், பேமெண்ட்டுகள், வரிகள் அல்லது சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியப் பலன்கள், வேலையின்மைக் காப்பீடு, ஆண்டுத்தொகைகள், சட்டம் அல்லது ஏதேனும் தொழிலாளர் சங்கப்படி தேவைப்படும் ஓய்வூதியம், நலநிதிப் பேமெண்ட்டுகள் போன்றவற்றுக்கான பிடித்தங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுத்திவைப்புகள் அல்லது வரிகளுக்கு (ஒரு பர்ச்சேஸ் தொடர்பாக Reddit வசூலிக்கும் விற்பனை வரியைத் தவிர) Reddit பொறுப்பேற்காது; மற்றும்

  • உங்கள் ஈட்டுதல் பங்களிப்புகள், சேவைகள் மூலம் அவற்றை நீங்கள் வழங்குவது, ஈட்டுதல் திட்டத்தில் உங்கள் பங்கேற்பு ஆகியவை பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறைகள், Reddit விதிகள் , வருமானம் ஈட்டல் கொள்கை, வருமானம் ஈட்டல் விதிமுறைகள், Reddit விதிமுறைகள் ஆகியவற்றுக்கு இணங்குகின்றன, தொடர்ந்து இணங்கும்.

குறிப்பிட்ட சூழ்நிலைகளில், உதாரணமாக, ஓர் அரசாங்க அமைப்பிடமிருந்து கோரிக்கை வரும்போது, பொருந்தக்கூடிய சட்டம் அல்லது ஒழுங்குமுறையின்படி தேவைப்படும்போது அல்லது வருமானம் ஈட்டல் விதிமுறைகளின் சாத்தியமான மீறலை விசாரிப்பதற்கு, கூடுதல் தகவல்களையும் ஆவணங்களையும் வழங்குமாறு உங்களை Reddit கேட்கக்கூடும். கோரப்பட்ட தகவல்கள் மற்றும் ஆவணங்களை Reddit பரிசீலித்து முடிக்கும் வரை தனது விருப்பத்தின்படி, உங்கள் கணக்கை முடக்கவும், சேவைகளை அணுகுவதற்கான வசதியைத் தடுக்கவும் Reddit-க்கு உரிமை உள்ளது. எங்கள் கோரிக்கைக்கு நீங்கள் முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்காவிட்டால், சேவைகளுக்கான உங்கள் அணுகலை மீட்டமைக்க Reddit மறுக்கக்கூடும்.

7. பொறுப்பு வரம்பு

ஈட்டுதல் திட்டத்தில் பங்கேற்பதன் மூலம், பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பு வரை மட்டுமே Reddit நிறுவனங்களின் பொறுப்பு அமையும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

வருமானம் ஈட்டல் விதிமுறைகள் தொடர்பாக அல்லது அதன் காரணமாக எழும் தற்செயலான, மறைமுகமான, சிறப்பு, தண்டனைக்குரிய, விளைவால் ஏற்படும் அல்லது அதுபோன்ற சேதங்கள் அல்லது பொறுப்புகளுக்கு Reddit நிறுவனங்கள் பொறுப்பேற்காது. இது ஒப்பந்தம், சிவில் தவறு (அலட்சியம் உட்பட), உரிமையியல் பொறுப்பு, சட்டம், முழுப் பொறுப்பு, உத்தரவாத மீறல் அல்லது வேறு எந்தப் பொறுப்புடைமைக் கோட்பாட்டின் கீழ், அந்தச் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறித்து எந்த Reddit நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், அவை அறிந்திருந்தாலும் அறிந்திருக்க வேண்டியிருந்தாலும், மேலும் வருமானம் ஈட்டல் விதிமுறைகளின் முக்கிய நோக்கத்தில் ஏதேனும் தோல்வி ஏற்பட்டிருந்தாலும், அதன் கீழ் ஏதேனும் வரையறுக்கப்பட்ட தீர்வு இருந்தாலும் இந்த விதி பொருந்தும்.

எந்தவொரு சூழ்நிலையிலும், ஈட்டுதல் திட்டம் தொடர்பாக எழும் Reddit நிறுவனங்களின் மொத்தப் பொறுப்பானது, எந்தவொரு பொறுப்புடைமைக் கோட்பாட்டின் கீழும், பொறுப்புக் கோரிக்கைக்கு வழிவகுக்கும் நிகழ்வுக்கு முந்தைய 12 மாதங்களில் வருமானம் ஈட்டல் விதிமுறைகளின்படி Reddit உங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை விட அதிகமாக இருக்காது.

8. இழப்பீடு

பின்வருபவற்றில் ஏதேனும் ஒன்றால் ஏற்படும் அல்லது அது தொடர்பான மூன்றாம் தரப்பினரின் கோரிக்கைகள், வழக்குகள் அல்லது சட்ட நடவடிக்கைகளின் (“கோரிக்கைகள்”) காரணமாக Reddit நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றிற்கு ஏற்படும் அனைத்துச் செலவுகள், பொறுப்புகள் மற்றும் செலவினங்கள் (வழக்கறிஞர் கட்டணங்கள் உட்பட) ஆகியவற்றிலிருந்து Reddit நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் பொறுப்பிலிருந்து விடுவிக்கவும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்: 1) உங்கள் ஈட்டுதல் பங்களிப்புகள்; 2) வருமானம் ஈட்டல் விதிமுறைகளை நீங்கள் மீறுதல்; 3) Reddit விதிமுறைகளின் கீழ் எங்கள் உரிமைகளை Reddit பயன்படுத்துவதால் ஏற்படும் எந்தவொரு நபர்/நிறுவனத்தின் அறிவுசார் சொத்துரிமைகள் அல்லது பிற தனிப்பட்ட/தனியுரிமை உரிமைகளின் மீறல் அல்லது பிற மீறல்; 4) உங்கள் பே-அவுட்கள் தொடர்பாக பொருந்தக்கூடிய வரிகளைச் செலுத்தத் தவறுதல் அல்லது முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட வரிப் படிவத்தை Reddit அல்லது எங்கள் பேமெண்ட் பார்ட்னருக்கு வழங்கத் தவறுதல்; அல்லது 5) நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட வருவாய் ஈட்டுபவர் அல்லது வருவாய் ஈட்டுபவரைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்றால், மேலாண்மை ஒப்பந்தத்தின் கீழ் எழும் எந்தவொரு பிரச்சனையும்.

பின்வரும் உரிமைகள் Reddit-க்கு இருக்கும்: 1) Reddit நிறுவனங்களுக்கு எதிரான எந்தவொரு கோரிக்கையையும் எதிர்கொள்ள நியமிக்கப்படும் வழக்கறிஞரை அங்கீகரித்தல்; மற்றும் 2) Reddit தொடர்பான விஷயங்கள் சார்ந்த கோரிக்கைகளுக்கான தற்காப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அதில் பங்கேற்றல். கோரிக்கைகளுக்கு எதிரான Reddit-இன் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவும், Reddit-இன் எழுத்துப்பூர்வ முன் அனுமதியின்றி கோரிக்கைகள் எதற்கும் சமரசம் செய்யவோ தீர்வு காணவோ கூடாது என்பதற்கும் ஒப்புக்கொள்கிறீர்கள்.

9. கால அளவு மற்றும் ஒப்பந்த முறிவு

உங்கள் கணக்கை நீக்கி, சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதன் மூலம் நீங்கள் எந்த நேரத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் வருமானம் ஈட்டல் விதிமுறைகளை முடிவுக்குக் கொண்டு வரலாம். இருப்பினும், நீங்கள் 12 மாத காலத்திற்குச் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தினால், நீண்ட காலச் செயலற்ற தன்மை காரணமாக உங்கள் கணக்கில் இனி எந்த ஈட்டுதலும் இருக்காது.

பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் முழு அளவிற்கு, வருமானம் ஈட்டல் விதிமுறைகள், வருமானம் ஈட்டல் கொள்கை அல்லது பிற Reddit விதிமுறைகளை மீறுவது உட்பட, நாங்கள் எந்த நேரத்திலும் எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது காரணம் இல்லாமலும் வருமானம் ஈட்டல் விதிமுறைகளை முடிவுக்குக் கொண்டுவரலாம், உங்கள் கணக்கை இடைநிறுத்தலாம், ரத்து செய்யலாம், உங்களுக்குப் பே-அவுட் செய்ய மறுக்கலாம்.

இருப்பினும், வருமானம் ஈட்டல் விதிமுறைகளை முடிவுக்குக் கொண்டுவருவது, வருமானம் ஈட்டல் விதிமுறைகள் தொடர்பான (அல்லது அதன் கீழ் எழும் பொறுப்புகள்) முந்தைய மீறல்களுக்கான பொறுப்பிலிருந்து Reddit அல்லது உங்களை விடுவிக்காது. வருமானம் ஈட்டல் விதிமுறைகள் முடிவுக்கு வந்தாலும், பின்வரும் பிரிவுகள் தொடர்ந்து செல்லுபடியாகும்: “பொறுப்பின் வரம்பு,” “இழப்பீடு,” “விதிமுறை மற்றும் முடிவு” மற்றும் “பிற விதிமுறைகள்.”

10. பிற விதிமுறைகள்

10.1 வருமானம் ஈட்டுபவர் தகவல்

உங்களின் வருமானம் ஈட்டுபவர் தகவல் எங்கள் தனியுரிமைக் கொள்கைக்கு இணங்கியும், ஏதேனும் ஈட்டுதல் திட்டத்தில் பங்கேற்கத் தகுதிபெறுகிறீர்களா என்பதைத் தீர்மானிக்கவும் பயன்படுத்தப்படும். ஏதேனும் ஈட்டுதல் திட்டத்தில் பங்கேற்பதற்கான உங்கள் தகுதிநிலையை உறுதிப்படுத்தவும், சட்டத்திற்கு இணங்கவும், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடியும், உங்களின் வருமானம் ஈட்டுபவர் தகவலை மூன்றாம் தரப்புப் பேமெண்ட் மற்றும் இணக்கச் சேவை வழங்குநர்களுடன் நாங்கள் பகிரக்கூடும். இதுபோன்ற நோக்கங்களுக்காக, Reddit உங்களின் வருமானம் ஈட்டுபவர் தகவலைச் சேகரிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும், பகிர்வதற்கும் நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள். உங்களின் வருமானம் ஈட்டுபவர் தகவலில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அந்த மாற்றங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும், உங்களின் வருமானம் ஈட்டுபவர் தகவலை எல்லா நேரங்களிலும் துல்லியமாகவும், முழுமையாகவும், சமீபத்தியதாகவும் வைத்திருக்க வேண்டும்.

10.2 இரகசியத்தன்மை

இரகசியத் தகவல்களை (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) இரகசியமாக வைத்திருக்கவும், வெளிப்படுத்தப்பட்ட இரகசியத் தகவல்களின் அங்கீகரிக்கப்படாத பயன்பாடு, பரவல் அல்லது வெளியீட்டைத் தடுக்க, அதே போன்ற உங்கள் சொந்த இரகசியத் தகவல்களைப் பாதுகாக்க நீங்கள் கையாளும் அதே கவனத்துடன் (குறைந்தபட்சம் நியாயமான கவனத்துடன்) அத்தகவல்களைப் பாதுகாக்கவும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். "இரகசியத் தகவல்கள்" என்பது, Reddit உங்களுக்கு எழுத்துப்பூர்வமாக வெளிப்படுத்தும் எந்தவொரு தகவலையும் உள்ளடக்கியது. அத்தகவல்கள் வெளிப்படுத்தப்படும் நேரத்தில் இரகசியமானது எனக் குறிக்கப்பட்டிருந்தாலோ, அதன் தன்மை அல்லது அது வெளிப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளும்போது நியாயமாக இரகசியமானது எனப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தாலோ அது இரகசியமானதாகக் கருதப்படும். இரகசியத் தகவல்கள் பின்வரும் தகவல்களை உள்ளடக்காது: 1) உங்கள் தரப்பில் எந்தத் தவறுமின்றி பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்த அல்லது தெரியக்கூடியவை; 2) எந்தவொரு இரகசியக் காப்புக் கடமையுமின்றி, மூன்றாம் தரப்பிடமிருந்து நீங்கள் சட்டப்பூர்வமாகப் பெறுவை; 3) சட்டத்தின் கீழ் வெளியிடப்படுபவை; அல்லது 4) Reddit-இன் எழுத்துப்பூர்வமான முன் அனுமதியுடன் வெளியிடப்படுபவை. உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட இரகசியத் தகவல்களில் உள்ள அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளையும் Reddit தக்கவைத்துக்கொள்கிறது.

10.3 ஆளும் சட்டம் மற்றும் அதிகார வரம்பு

ஈட்டுதல் திட்டத்தில் நீங்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே, உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது பிணக்கு ஏற்பட்டால், அதைத் தெரியப்படுத்தி எங்களுடன் பேசித் தீர்க்க முயற்சிக்க ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் கருத்துகளையும் கவலைகளையும் இங்கே எங்களிடம் தெரிவிக்கலாம்.

பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட முழு அளவிற்கு, வருமானம் ஈட்டல் விதிமுறைகள் அல்லது ஈட்டுதல் திட்டங்கள் தொடர்பாக எழும் எந்தவொரு கோரிக்கையும், அதன் சட்ட முரண்பாட்டு விதிகளைப் பொருட்படுத்தாமல், கலிஃபோர்னியா மாநிலத்தின் சட்டங்களால் நிர்வகிக்கப்படும்.

வருமானம் ஈட்டல் விதிமுறைகள் அல்லது ஈட்டுதல் திட்டங்கள் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் கலிஃபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கூட்டாட்சி அல்லது மாநில நீதிமன்றங்களில் மட்டுமே முன்வைக்கப்பட வேண்டும். மேலும், இந்த நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்குக் கட்டுப்பட நீங்களும் Reddit நிறுவனமும் ஒப்புக்கொள்கிறீர்கள்.

10.4 ஈமெயில்கள் மற்றும் பிற அறிவிப்புகள்

வருமானம் ஈட்டல் விதிமுறைகளுக்கு ஒப்புக்கொள்வதன் மூலமும், ஈட்டுதல் திட்டங்களில் பங்கேற்பதன் மூலமும் எங்களிடமிருந்து வரும் தகவல்தொடர்புகளையோ ஈட்டுதல் திட்டங்கள் தொடர்பான தகவல்தொடர்புகளையோ உங்கள் கணக்கிலோ உங்களால் அல்லது உங்கள் சார்பாக Reddit-க்கு வழங்கப்பட்ட ஏதேனும் ஓர் ஈமெயில் முகவரியிலோ பெறுவதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள். Reddit நிறுவனங்களிடமிருந்து வரும் தகவல்தொடர்புகளில், உங்கள் பே-அவுட்கள் அல்லது ஈட்டுதல் திட்டங்களில் உங்கள் பங்கேற்பு தொடர்பான செயல்பாட்டுத் தகவல்தொடர்புகள், உங்கள் பே-அவுட்கள் தொடர்பாக கோரப்பட்ட மாற்றங்கள் அல்லது ஈட்டுதல் திட்டங்களில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்த தகவல்கள், எங்களால் அல்லது எங்கள் மூன்றாம் தரப்புப் பார்ட்னர்களால் நடத்தப்படும் சந்தைப்படுத்தல் அல்லது விளம்பரங்கள் தொடர்பான தகவல்தொடர்புகள், Reddit மற்றும் தொழில்துறை முன்னேற்றங்கள் குறித்த செய்திகள் ஆகியவை அடங்கலாம். Reddit-க்கு நீங்கள் வழங்கிய ஈமெயில் முகவரியை மாற்றினாலோ முடக்கினாலோ, உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க ஒப்புக்கொள்கிறீர்கள்.

விளம்பர ஈமெயில்களுக்கான ஒப்புதலை நீக்க விரும்பினால், அந்த விளம்பர ஈமெயிலிலேயே உள்ள சந்தா விலகுவதற்கான விருப்பங்களைப் பின்பற்றி எங்கள் விளம்பர ஈமெயில் பட்டியலிலிருந்து நீங்கள் சந்தா விலகிக்கொள்ளலாம்.

ஈட்டுதல் திட்டங்கள் தொடர்பாக வழங்கப்படும் அல்லது வழங்கப்பட வேண்டிய அனைத்து வகையான அறிவிப்புகளும் தகவல்தொடர்புகளும் எழுத்துப்பூர்வமாக இருக்கும். மேலும், அவை சேவைகள் வழியாக உங்கள் கணக்கிற்கோ உங்கள் கணக்குடன் தொடர்புடைய ஈமெயில் முகவரிக்கோ அனுப்பப்படும்.

10.5 வருமானம் ஈட்டல் விதிமுறைகளில் மாற்றங்கள்

நாங்கள் அவ்வப்போது வருமானம் ஈட்டல் விதிமுறைகளில் மாற்றங்களைச் செய்யக்கூடும். நாங்கள் மாற்றங்களைச் செய்தால், மாற்றப்பட்ட வருமானம் ஈட்டல் விதிமுறைகளைப் பதிவிடுவோம். எங்கள் தனிப்பட்ட விருப்பத்தின்படி, இந்த மாற்றங்கள் முக்கியமானவை என்று நாங்கள் கருதினால், உங்கள் கணக்குடன் தொடர்புடைய ஈமெயில் முகவரிக்கு ஈமெயில் அனுப்புவதன் மூலமாகவோ, எங்கள் சேவைகள் வாயிலாகப் பிற வழிகளில் அறிவிப்பு வழங்குவதன் மூலமாகவோ நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும். வருமானம் ஈட்டல் விதிமுறைகள் மாற்றப்பட்ட பிறகு, ஈட்டுதல் திட்டத்தில் தொடர்ந்து பங்கேற்பதன் மூலமாகவோ பே-அவுட்டைப் பெறுவதன் மூலமாகவோ, மாற்றப்பட்ட வருமானம் ஈட்டல் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட ஒப்புக்கொள்கிறீர்கள். மாற்றப்பட்ட வருமானம் ஈட்டல் விதிமுறைகளை ஏற்கவில்லை என்றால், ஈட்டுதல் திட்டத்தில் பங்கேற்பதையும் பே-அவுட்டைப் பெறுவதையும் நீங்கள் நிறுத்த வேண்டும்.

எங்கள் தனிப்பட்ட விருப்பத்தின்படி, முன்னறிவிப்போ Reddit-க்குப் பொறுப்போ இன்றி (பொருந்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டு), எந்த நேரத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் அல்லது காரணமில்லாமலும் வருமானம் ஈட்டல் விதிமுறைகள் மாற்றப்படலாம் மற்றும் ஈட்டுதல் திட்டங்கள் ரத்து செய்யப்படலாம் என்பதை ஏற்றுக்கொண்டு புரிந்துகொள்கிறீர்கள். வருமானம் ஈட்டல் விதிமுறைகளில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளனவா எனப் பார்க்கவும்; அவ்வாறு செய்வது உங்கள் பொறுப்பாகும்.

10.6 இதர விவரங்கள்

வருமானம் ஈட்டல் விதிமுறைகளின் கீழ் உள்ள தனது உரிமைகள் மற்றும் கடமைகள் எதையும் Reddit தாராளமாக வேறொருவருக்கு மாற்றலாம் ஒப்படைக்கலாம். Reddit-இன் ஒப்புதல் இன்றி, வருமானம் ஈட்டல் விதிமுறைகளின் கீழ் உள்ள உங்கள் உரிமைகள் அல்லது கடமைகள் எதையும் நீங்கள் பிறரிடம் ஒப்படைக்கவோ மாற்றவோ கூடாது.

ஈட்டுதல் திட்டத்தில் பங்கேற்க, வருமானம் ஈட்டல் விதிமுறைகளைப் படிக்கவும், சிந்தித்துப் பார்க்கவும், பரிசீலிக்கவும் உங்களுக்குப் போதுமான வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், வருமானம் ஈட்டல் விதிமுறைகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டு மனமுவந்து ஏற்பதாகவும் ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள். வருமானம் ஈட்டல் விதிமுறைகளில் இணைவது குறித்து, நீங்கள் தேர்வுசெய்த வழக்கறிஞர்களிடமிருந்து சுயாதீனமான சட்ட ஆலோசனையைப் பெற்றுள்ளீர்கள் அல்லது அதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தீர்கள் என்பதையும் ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள்.

நீங்கள் ஈட்டுதல் திட்டத்தில் பங்கேற்பதும் வருமானம் ஈட்டல் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதும், உங்களுக்கும் Reddit-க்கும் இடையே எந்தவொரு ஏஜென்சி, பார்ட்னர்ஷிப் அல்லது கூட்டு முயற்சியையும் உருவாக்குவதில்லை. வருமான வரிப் பிடித்தம், வேலையின்மைக்கான இழப்பீடு, தொழிலாளர்களுக்கான இழப்பீடு, சமூகப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் அல்லது கூட்டாட்சிக் காப்பீட்டுப் பங்களிப்புச் சட்டம் உட்பட, எந்தவொரு கூட்டாட்சி, மாநில அல்லது உள்ளூர் சட்டத்தின்படியும், வருமானம் ஈட்டல் விதிமுறைகளின் கீழ் நீங்கள் Reddit பணியாளராகக் கருதப்படமாட்டீர்கள்.

வருமானம் ஈட்டல் விதிமுறைகளில் உள்ள தலைப்புகள் குறிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன, அவற்றை விளக்கும்போது அவை கருத்தில் கொள்ளப்படாது. வருமானம் ஈட்டல் விதிமுறைகளின் நோக்கங்களுக்காக: 1) “உள்ளடக்கு,” “உள்ளடக்குகிறது,” “உள்ளடக்கிய” ஆகிய சொற்களைத் தொடர்ந்து “வரம்பில்லாமல்” என்ற சொல் வருவதாகக் கருதப்படும்; 2) “போன்ற,” “உதாரணமாக,” “எ.கா.” மற்றும் இதுபோன்ற சொற்கள் 'உதாரணத்தின் வகை' என்று பொருள்படும், மேலும் இந்தச் சொற்களைத் தொடர்ந்து வருபவை முழுமையான பட்டியலாகக் கருதப்படாது; மற்றும் 3) “அல்லது” என்ற சொல் “மற்றும்/அல்லது” என்பதன் உள்ளடக்கிய பொருளில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் “அல்லது,” “ஏதேனும்,” மற்றும் “இரண்டில் ஒன்று” ஆகிய சொற்கள் ஒன்றையொன்று விலக்காது. ஆவணத்தைத் தயார்செய்த தரப்பு என்ற வாசகத்தின் அடிப்படையில், எந்தவிதமான தெளிவின்மையும் அத்தரப்புக்கு எதிராகக் கருதப்படாது.

வருமானம் ஈட்டல் விதிமுறைகளில் ஏதேனும் ஒரு விதிமுறை அல்லது வருமானம் ஈட்டல் விதிமுறைகளில் ஏதேனும் ஒன்றின் பயன்பாடு சட்டத்திற்கு முரணானதாகவோ, செல்லாததாகவோ, செயல்படுத்த முடியாததாகவோ கருதப்பட்டால், அந்த விதிமுறை இயன்றவரை அதிகபட்ச அளவிற்குச் செயல்படுத்தப்படும்; மேலும், வருமானம் ஈட்டல் விதிமுறைகளின் ஏனைய விதிமுறைகள் முழு வீச்சில் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

வருமானம் ஈட்டல் விதிமுறைகளின் ஏதேனும் நிபந்தனை அல்லது விதிமுறையை மற்றொரு தரப்பினர் மீறும்போது அது குறித்து அறிவிக்க அல்லது அந்த விதிக்கு இணங்குமாறு கோர நீங்களோ Reddit நிறுவனமோ தவறியதால் அதே விதிமுறையிலோ வேறு எந்த விதிமுறையிலோ ஏற்படும் அடுத்தடுத்த மீறல் அல்லது தவறுதலுக்கான உரிமையைக் கைவிடுவதாகக் கருதப்படாது.

வருமானம் ஈட்டல் விதிமுறைகளில் ( பயனர் ஒப்பந்தம், வணிக விதிமுறைகள்,  முன்னோட்ட விதிமுறைகள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன, இவை இந்தக் குறிப்புகளால் வருமானம் ஈட்டல் விதிமுறைகளில் இணைக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டுள்ளன) மற்றும் வருமானம் ஈட்டல் விதிமுறைகளில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டு இணைக்கப்பட்டுள்ள பிற ஒப்பந்தங்கள் அனைத்தும் உங்களுக்கும் Reddit-க்கும் இடையிலான சட்டப்பூர்வமாகப் பிணைக்கும் ஒரு ஒப்பந்தமாகும். மேலும், இது ஈட்டுதல் திட்டத்தின் பொருள் தொடர்பாக இரு தரப்பினரின் முழுமையான ஒப்பந்தத்தை உள்ளடக்கியதுடன், கூறப்பட்ட விஷயம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாய்மொழியாகவோ எழுத்துப்பூர்வமாகவோ இருந்த முந்தைய தகவல்தொடர்புகள், பிரதிநிதித்துவங்கள், புரிதல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு அவற்றுக்குப் பதிலாகச் செல்லுபடியாகும். வருமானம் ஈட்டல் விதிமுறைகள் ஏதேனும் மற்ற Reddit விதிமுறைகளுடன் முரண்படும் பட்சத்தில், ஈட்டுதல் திட்டத்தைப் பொறுத்தவரை வருமானம் ஈட்டல் விதிமுறைகளே மேலோங்கும்.

வருமானம் ஈட்டல் விதிமுறைகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால்,  எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

 

⌂ 换网址