
Reddit வணிக விதிமுறைகள்
- தமிழ்
- Bahasa Indonesia
- Bahasa Melayu - Malaysia
- Čeština – Česká republika
- Dansk - Danmark
- Deutsch – Deutschland
- English
- Español - España
- Español - México
- Farsi
- Français - France
- Hrvatski – Hrvatska
- Italiano - Italia
- Magyar – Magyarország
- Nederlands - Nederland
- Norwegian Bokmål
- Polski (Polska)
- Português - Brasil
- Português - Portugal
- Română - România
- Slovenčina - Slovensko
- Suomi – Suomi
- Svenska – Sverige
- Tagalog
- Tiếng Việt - Việt Nam
- Türkçe - Türkiye
- Ελληνικά - Ελλάδα
- Български – България
- Русский — Россия
- Српски – Србија
- Українська — Україна
- עברית
- اردو
- العربية
- मराठी
- हिंदी भारत
- বাংলা
- ગુજરાતી
- తెలుగు
- ಕನ್ನಡ
- ไทย
- 한국어 - 대한민국
- 中文 - 繁體
- 日本語 - 日本
- 简体中文
செப்டம்பர் 24, 2024-இல் அமலுக்கு வந்தது. செப்டம்பர் 24, 2024-இல் கடைசியாகத் திருத்தப்பட்டது
வரவேற்கிறோம்! சேவைகள் மூலம் கிடைக்கப்பெறும் Reddit விர்ச்சுவல் பொருளாதாரத்தின் கட்டணச் சேவைகள் மற்றும் பிற அம்சங்களை நீங்கள் எவ்வாறு அணுகலாம், வாங்கலாம், பயன்படுத்தலாம் என்பதை Reddit வணிக விதிமுறைகள் (இந்த “வணிக விதிமுறைகள்”) கட்டுப்படுத்துகின்றன. நீங்கள் ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட Reddit பயனர் ஒப்பந்தத்துடன் (“பயனர் ஒப்பந்தம்”) சேர்த்து இந்த வணிக விதிமுறைகளும் செல்லுபடியாகும். மேலும், பயனர் ஒப்பந்தத்தில் உள்ள சில முக்கிய விதிமுறைகளும் இதற்குப் பொருந்தும்.
Reddit Premium அல்லது டிஜிட்டல் பொருட்கள் (ஒவ்வொன்றும் கீழே வரையறுக்கப்பட்டுள்ளன) உள்ளிட்ட கட்டணச் சேவைகளை அணுகுவதன் மூலமோ வாங்குவதன் மூலமோ, வேறுவிதமாகப் பயன்படுத்துவதன் மூலமோ, இந்த வணிக விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த வணிக விதிமுறைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால், கட்டணச் சேவைகளை அணுகவோ, வாங்கவோ, பயன்படுத்தவோ உங்களுக்கு அனுமதி இல்லை.
1. கட்டணச் சேவைகள் மற்றும் பேமெண்ட் தகவல்கள்
1.1 மேலோட்டம்
சேவைகளின் பல அம்சங்களைப் பயன்படுத்துவதற்குக் கட்டணம் இல்லை என்றாலும், கட்டணச் சேவைகள் தொடர்பாக Reddit கட்டணம் விதிக்கிறது. இவற்றில், இந்த வணிக விதிமுறைகள், (பொருந்தினால்) எங்களது முன்னோட்ட விதிமுறைகள் ஆகியவற்றின் கீழ் சேவைகள் மூலம் கிடைக்கப்பெறும் குறிப்பிட்ட சந்தா உறுப்பினர் உரிமைகள் (“சந்தாக்கள்”), குறிப்பிட்ட டிஜிட்டல் அவதார்கள், பொருட்கள், நாணயங்கள் அல்லது பிற பொருட்கள் (ஒட்டுமொத்தமாக “டிஜிட்டல் பொருட்கள்”) ஆகியவை அடங்கும்.
1.2 பேமெண்ட் தகவல்
கட்டணச் சேவைகளைப் பர்ச்சேஸ் செய்வதற்கு, எங்கள் சேவைகள் மூலம் உங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது பிற பேமெண்ட் தகவலை (உங்கள் “பேமெண்ட் தகவல்”) நீங்கள் சமர்ப்பிக்கலாம். நாடு அல்லது கட்டணச் சேவைகளைப் பொறுத்து மாறுபடக்கூடிய சில பேமெண்ட் முறைகளை Reddit ஏற்றுக்கொள்கிறது. உங்கள் பேமெண்ட் தகவலைச் செயலாக்குவதற்காக, நாங்கள் மூன்றாம் தரப்புப் பேமெண்ட் செயலாக்கிகளை (உதாரணமாக, Apple, Google, Stripe, PayPal போன்றவை) பயன்படுத்துகிறோம் (எங்கள் “பேமெண்ட் பார்ட்னர்கள்”).
உங்கள் பேமெண்ட் தகவலைச் சமர்ப்பித்தால், பின்வருபவற்றிற்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்:
-
உங்கள் பேமெண்ட் தகவல் உண்மையானது மற்றும் சரியானது;
-
உங்கள் பேமெண்ட் தகவலைப் பயன்படுத்த உங்களுக்கு அனுமதி உண்டு;
-
கட்டணச் சேவைகளுக்கான தொகையை (பொருந்தக்கூடிய வரிகள், கட்டணங்கள் மற்றும் செலவுகள் உட்பட) செலுத்த வேண்டிய தேதிக்குள் நீங்கள் செலுத்த வேண்டும்;
-
பர்ச்சேஸுக்கான முழுத் தொகையையும் (பொருந்தக்கூடிய வரிகள், கட்டணங்கள் மற்றும் செலவுகள் உட்பட) செலுத்த வேண்டியிருக்கும் போது, உங்கள் பேமெண்ட் தகவல்களைப் பயன்படுத்தி, கட்டணச் சேவைகளுக்காக உங்களிடம் கட்டணம் விதிக்க, எங்களுக்கும் எங்கள் பேமெண்ட் பார்ட்னர்களுக்கும் நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள்;
-
நீங்கள் கட்டணச் சேவைகளைப் பர்ச்சேஸ் செய்வதைச் செயலாக்குவதற்காக, நாங்கள் உங்கள் பேமெண்ட் தகவலை எங்கள் பேமெண்ட் பார்ட்னர்களுடன் தக்கவைத்துக்கொண்டு பகிரக்கூடும்; மற்றும்
-
புதுப்பித்தல்கள், தொடர்ச்சியான கட்டணங்கள், மற்றும் உங்களது பர்ச்சேஸைப் பாதிக்கும் மாற்றங்கள் தொடர்பான அறிவிப்புகளையும் வெளிப்படுத்துதல்களையும் உங்களுக்கு வழங்குவதற்காக, உங்களது பேமெண்ட் தகவலை (எங்களது பேமெண்ட் பார்ட்னர்கள் மூலம் எங்களுக்கு வழங்கப்பட்ட உங்களைப் பற்றிய மற்றும் உங்களது பேமெண்ட் தகவல் பற்றிய எந்தவொரு தகவலும் உட்பட) நாங்கள் தக்கவைத்துக்கொண்டு பயன்படுத்தக்கூடும்.
எங்கள் பேமெண்ட் பார்ட்னர்கள் மூலம் நீங்கள் ஏதேனும் கட்டணச் சேவையைப் பர்ச்சேஸ் செய்தால், சம்பந்தப்பட்ட பேமெண்ட் பார்ட்னர்களின் சட்ட விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளுக்கு அந்தப் பர்ச்சேஸ் மேலும் உட்பட்டிருக்கலாம். எங்கள் பேமெண்ட் பார்ட்னர்கள் மூலம் செய்யப்படும் பர்ச்சேஸ்களுக்கு, சம்பந்தப்பட்ட பேமெண்ட் பார்ட்னருடனேயே நேரடியாக உங்கள் பில்லிங் தொடர்பு இருக்கும். கட்டணச் சேவைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள், நீங்கள் வழங்கிய பேமெண்ட் முறையைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட பேமெண்ட் பார்ட்னரால் பில் செய்யப்படும்.
1.3 கட்டணங்களில் வரவிருக்கும் மாற்றங்கள்
முக்கியமான மாற்றங்கள் குறித்த நியாயமான முன்னறிவிப்புடன், கட்டணச் சேவைகளுடன் தொடர்புடைய கட்டணங்கள் அல்லது பலன்களை Reddit அவ்வப்போது மாற்றக்கூடும். இருப்பினும், கட்டணச் சேவைகளுடன் தொடர்புடைய கட்டணங்களில் ஏற்படும் தற்காலிகக் குறைப்புகள் உள்ளிட்ட தற்காலிக விளம்பரங்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் தேவையில்லை.
1.4 மூன்றாம் தரப்புக் கட்டணச் சேவைகள்
சேவைகள் மூலம் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடமிருந்து சந்தாக்கள் அல்லது பிற டிஜிட்டல் பொருட்களை வாங்குவதற்கு உங்களுக்கு அனுமதி அளிக்கப்படலாம் (“மூன்றாம் தரப்புக் கட்டணச் சேவைகள்”). மூன்றாம் தரப்புக் கட்டணச் சேவைகளை வழங்கும் ஒவ்வொரு விற்பனையாளரின் சார்பாகவும் உங்களிடமிருந்து கட்டணங்களைப் பெறும்போது, Reddit அந்தப் பணத்தைச் சேகரிக்கும் முகவராகச் செயல்படுகிறது. இருப்பினும், மூன்றாம் தரப்புக் கட்டணச் சேவைகளை விவரிப்பதற்கும் வழங்குவதற்கும் அதன் விற்பனையாளர்களே பொறுப்பாவார்கள். மூன்றாம் தரப்புக் கட்டணச் சேவைகளின் தரத்தை Reddit கட்டுப்படுத்துவதில்லை, மேலும் அவற்றை வழங்கும் விற்பனையாளரின் அடையாளத்தையோ அவர்கள் கூறும் கூற்றுகளின் செல்லுபடியாகும் தன்மையையோ அது உறுதிப்படுத்த முடியாது.
1.5 தள்ளுபடிகள் மற்றும் பரிசுகள்
Reddit கட்டணச் சேவைகளுக்குத் தள்ளுபடிகளை வழங்கக்கூடும். ஒவ்வொரு தள்ளுபடியின் குறிப்பிட்ட விதிமுறைகளும் தள்ளுபடி வழங்கப்படும் நேரத்தில் குறிப்பிடப்படும். உதாரணமாக, கட்டணமின்றிச் சந்தாவைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கும் ஏதேனும் டிரையல் கால ஆஃபரில் நீங்கள் பங்கேற்று, அந்த டிரையல் காலம் முடிவடைந்தவுடன் அது கட்டணச் சந்தாவாக மாறினால், கட்டணச் சந்தாவிற்கான கட்டணங்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, நீங்கள் டிரையல் காலம் முடிவடைவதற்கு முன்பே அந்தச் சந்தாவை ரத்துசெய்ய வேண்டும்.
ரெடிட்டர்கள் இந்தச் சேவைகள் மூலம் குறிப்பிட்ட டிஜிட்டல் பொருட்களை வாங்கி மற்ற ரெட்டிட்டர்களுக்குப் பரிசளிக்கலாம். பரிசை அணுகுவதற்கோ பயன்படுத்துவதற்கோ உங்களிடம் கட்டணம் விதிக்கப்படாது, ஆனால் குறிப்பிட்ட சில பரிசுகளைப் பெறுவதற்கோ பயன்படுத்துவதற்கோ உங்கள் பேமெண்ட் தகவலை நீங்கள் வழங்க வேண்டியிருக்கலாம்.
1.6 பணம் திரும்பப்பெறுதல் கொள்கை
சேவைகள் மூலம் நீங்கள் வாங்கும் கட்டணச் சேவைகளை உடனடியாக அணுகலாம், பயன்படுத்தலாம். இதன் விளைவாக, சட்டத்தால் அனுமதிக்கப்படும் உச்சபட்ச அளவிற்கு, அனைத்துப் பர்ச்சேஸ்களும் இறுதியானவை, பணம் திரும்பப் பெற முடியாதவை மற்றும் திருப்பியளிக்க முடியாதவை ஆகும். பகுதியளவு பயன்படுத்தப்பட்ட பில்லிங் காலங்களுக்குப் பணத்தைத் திரும்ப அளிக்கவோ வரவு வைக்கவோ எங்களுக்குக் கடமை இல்லை.
நீங்கள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி (EEA), ஐக்கிய இராச்சியம் அல்லது சுவிட்சர்லாந்தில் வசிப்பவராக இருந்தால், எந்தக் காரணமும் கூறாமல் 14 நாட்களுக்குள் இந்த வணிக விதிமுறைகளிலிருந்து விலகிக்கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. இந்த வணிக விதிமுறைகள் முடிவுக்கு வந்த தேதியிலிருந்து 14 நாட்களுக்குள் திரும்பப் பெறலாம். திரும்பப் பெறும் உரிமையைப் பயன்படுத்த, நீங்கள் Reddit-க்கு ஒரு கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் .
இருப்பினும், (a) டிஜிட்டல் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான உரிமம் அல்லது (b) ஒரு சந்தா ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டணச் சேவைகளை நீங்கள் பர்ச்சேஸ் செய்யும்போது, திரும்பப் பெறும் உங்கள் உரிமை ரத்தாகிவிடும் என்பதைத் கவனத்தில்கொள்ளவும். டிஜிட்டல் பொருள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டவுடனோ சந்தா தொடங்கும்போதோ, இந்தக் கட்டணச் சேவைகள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், அவற்றைப் பர்ச்சேஸ் செய்த உடனேயே இந்த முறையில் இந்தச் சேவைகள் உங்களுக்கு வழங்கப்படுவதற்கு நீங்கள் கோரிக்கை விடுத்து ஒப்புதல் அளிக்கிறீர்கள்.
1.7 வரிகள் மற்றும் கட்டணங்கள்
தேவைப்படும்போது Reddit பொருந்தக்கூடிய வரிகளையும் கட்டணங்களையும் விதிக்கும், ஆனால் சேவைகளைப் பயன்படுத்துவது மற்றும் கட்டணச் சேவைகளை அணுகுவது, பர்ச்சேஸ் செய்வது, பயன்படுத்துவது தொடர்பான அனைத்துப் பொருந்தக்கூடிய வரிகளையும் கட்டணங்களையும் செலுத்துவது உங்கள் பொறுப்பாகும். இதில், பரிவர்த்தனை வரிகள், டேட்டா திட்டக் கட்டணங்கள், இன்டர்நெட் கட்டணங்கள் மற்றும் அதுபோன்ற பிற செலவுகளும் அடங்கும்.
2. சந்தாக்கள்
2.1 Reddit Premium
Reddit Premium என்பது சேவைகளில் உங்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்கும் ஒரு சந்தா (“Premium”) ஆகும். நீங்கள் Premium சந்தாவைப் பர்ச்சேஸ் செய்யும்போது, தொடர்ச்சியான பேமெண்ட்டுகளுக்கு அங்கீகாரம் அளிக்கிறீர்கள் என்பதையும், அந்தச் சந்தா உங்களுக்கோ Reddit-க்கோ ரத்துசெய்யப்படும் வரை, பேமெண்ட் தகவல் மூலமாகவும் நீங்கள் ஒப்புக்கொண்ட தொடர்ச்சியான இடைவெளிகளிலும் (மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும்) Reddit-க்குப் பேமெண்ட்டுகள் செலுத்தப்படும் என்பதையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறீர்கள்.
உங்கள் கணக்கின் பயனர் அமைப்புகள் அல்லது உங்கள் மொபைல் ஆப்ஸ் வழியாக (மூன்றாம் தரப்பினர் மூலம் பெறப்பட்ட Premium சந்தாக்களுக்கு) உங்கள் Premium சந்தா மற்றும் பேமெண்ட் தகவலை நீங்கள் நிர்வகிக்கலாம். உங்கள் சந்தா தொடங்கும் நாளன்று, உங்கள் பேமெண்ட் தகவலை நாங்கள் தானாகவே செயலாக்குகிறோம். அடுத்த மாதத்தில் இல்லாத ஒரு நாளில் உங்கள் சந்தா தொடங்கினால், அந்த மாதத்தின் கடைசி நாளில் உங்களுக்குக் கட்டணம் விதிக்கப்படும். கூடுதல் மூன்றாம் தரப்பு விதிமுறைகளைப் பொறுத்து, மொபைல் புதுப்பித்தல் செயலாக்கத் தேதிகள் மாறுபடலாம்.
உங்கள் பேமெண்ட் தகவல் நிராகரிக்கப்பட்டால், நீங்கள் புதிய பேமெண்ட் தகவலை வழங்க வேண்டும், இல்லையெனில் உங்கள் Premium சந்தா ரத்துசெய்யப்படும். நீங்கள் புதிய பேமெண்ட் தகவலை வழங்கி, உங்களிடமிருந்து கட்டணம் பெறப்பட்டால், கட்டணம் விதிக்கப்பட்ட தேதியின் அடிப்படையில் அல்லாமல் அசல் புதுப்பித்தல் தேதியின் அடிப்படையில் புதிய சந்தாக் காலம் கணக்கிடப்படும்.
Premium-க்கான விலையை நாங்கள் மாற்றக்கூடும் (தானியங்கிப் புதுப்பித்தலின் ஒரு பகுதியாக உட்பட), ஆனால் எந்தவொரு விலை மாற்றம் குறித்தும் அது நடைமுறைக்கு வரும் தேதி குறித்தும் உங்களுக்கு முன்கூட்டியே அறிவிப்போம். விலை மாற்றம் அமலுக்கு வந்த தேதிக்குப் பிறகு, Premium உடன் தொடர்புடைய பலன்களை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதும் பெறுவதும், சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட முழு அளவிற்குப் புதிய விலையை நீங்கள் ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும். அடுத்த சந்தா காலம் தொடங்குவதற்குக் குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்கு முன்பாக உங்கள் சந்தாவை ரத்துசெய்வதன் மூலமும் நீங்கள் விலை மாற்றத்தை நிராகரிக்கலாம்.
நீங்கள் Premium-ஐ எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம். உங்கள் சந்தாக் காலம் முடிவடைவதற்கு குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்கு முன்பாக நீங்கள் ரத்துசெய்யாத பட்சத்தில், உங்கள் சந்தா (ஒவ்வொரு மாதமும் அல்லது ஆண்டும்) தானாகவே புதுப்பிக்கப்படும். உங்கள் சந்தாவை ரத்துசெய்ய விரும்பினால், கீழே விவரிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் சந்தா தானாகவே புதுப்பிக்கப்படும். நீங்கள் ரத்துசெய்யாத பட்சத்தில், புதுப்பிக்கப்படும் சந்தாவிற்கான கட்டணத்தை, அதாவது அப்போதைய சந்தாக் கட்டணம் மற்றும் சந்தா புதுப்பிக்கப்படும் தேதியில் பொருந்தக்கூடிய வரிகள் உட்பட, உங்களிடமிருந்து பெறுவதற்காக உங்கள் பேமெண்ட் தகவலைப் பயன்படுத்த எங்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறீர்கள்.
உங்கள் சந்தாவை ரத்துசெய்ய, உங்கள் கணக்கில் பயனர் அமைப்புகளில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். உங்கள் Apple ஐடியைப் பயன்படுத்தி நீங்கள் Premium பர்சேஸ் செய்திருந்தால், உங்கள் சாதனத்தின் கணக்கு அமைப்புகள் வழியாகவோ Apple App Store-இன் சந்தாக்களை நிர்வகிக்கும் பகுதியிலோ உங்கள் சந்தாவை ரத்துசெய்யலாம். நீங்கள் Google Play மூலம் Premium சந்தாவைப் பர்ச்சேஸ் செய்திருந்தால், Google Play-இன் சந்தாக்கள் பகுதிக்குச் சென்று உங்கள் சந்தாவை ரத்துசெய்யலாம்.
நீங்கள் ரத்துசெய்யும் நேரத்திலிருந்து உங்களின் தற்போதைய பில்லிங் காலம் முடியும் வரை உங்கள் சந்தா செயலில் இருக்கும். மேலும் உங்களின் தற்போதைய பில்லிங் காலத்தில் மீதமுள்ள நாட்களுக்கு உங்களுக்குப் பணமோ கிரெடிட்டோ திருப்பியளிக்கப்படாது. உங்கள் சந்தாவின் முடிவில், Premium-க்கு மட்டுமே உரித்தான, குறிப்பிட்ட காலத்திற்கான டிஜிட்டல் பொருட்களைச் சேமிக்க அல்லது பாதுகாத்து வைக்க உதவும் அம்சங்கள் உட்பட, Premium உடன் தொடர்புடைய அனைத்து அம்சங்களுக்குமான அணுகலை நீங்கள் இழப்பீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
2.2 முன்னோட்ட அம்சங்கள்
Reddit தனது முன்னோட்ட விதிமுறைகளின் கீழ் பிற சந்தாக்களையும் உருவாக்கக்கூடும். தற்போது என்னென்ன சந்தாக்கள் கிடைக்கின்றன (ஏதேனும் இருந்தால்) என்பதைத் தெரிந்துகொள்ள, முன்னோட்ட விதிமுறைகளைப் பார்க்கவும்.
3. டிஜிட்டல் பொருட்கள்
3.1 Reddit அவதார்கள்
Reddit அவதார்கள் என்பவை, நீங்கள் சேவைகள் மூலம் தனிப்பயனாக்கவும், கிளைம் செய்யவும், பிற வழிகளில் பயன்படுத்தவும் கூடிய டிஜிட்டல் அவதார்கள் ஆகும். மேலும், இவை ஒரு வகையான டிஜிட்டல் பொருள் (“அவதார்கள்”) ஆகும். உங்கள் அவதார், உங்கள் கணக்கின் சுயவிவரப் பக்கத்திலும், சேவைகள் முழுவதிலும் (எ.கா., பதிவுகள், கருத்துகள் மற்றும் சாட்கள்) உங்கள் அவதாராகவே காட்டப்படும்.
ஒவ்வொரு அவதாரும் அதற்கே உரிய மற்றும் தனித்துவமான உபகரணங்கள், துணைக்கருவிகள், ஆடைகள், சிகை அலங்காரங்கள், பின்னணிக் கார்டுகள் மற்றும்/அல்லது பிற கலைப்படைப்புகளை (“அவதார் கலை”) கொண்டுள்ளது. அவதார் கலைக்கான உரிமம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, அது விற்கப்படவில்லை. இந்த வணிக விதிமுறைகளில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படாத அவதார் கலை தொடர்பான அனைத்து உரிமைகளையும் Reddit மற்றும் எங்கள் உரிமதாரர்கள் தக்கவைத்துக் கொள்கிறார்கள்.
இந்த வணிக விதிமுறைகள் மற்றும் பயனர் ஒப்பந்தத்தில் (பிரிவு 3 உட்பட) குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை நீங்கள் தொடர்ந்து பின்பற்றுவதற்கு உட்பட்டு, உங்கள் அவதாருடன் தொடர்புடைய அவதார் கலைப்படைப்பின் முழுமையையோ ஒரு பகுதியையோ பயன்படுத்தவும் காட்சிப்படுத்தவும், அந்த அவதார் கலைப்படைப்பை சேவைகள் மூலம் Reddit மற்றும் அதன் உரிமமளிப்பாளர்களால் கிடைக்கப்பெறும் பிற அவதார் கலைப்படைப்புடன் கலந்து பயன்படுத்தவும், உங்களது சொந்தத் தனிப்பட்ட, வணிக நோக்கமற்ற பயன்பாட்டிற்காக, சேவைகளுக்குள் மட்டுமே மற்றும் உங்கள் அவதாரை அமைத்துள்ள கணக்கின் மூலம் பயன்படுத்தக் கூடிய வகையில் — மாற்ற முடியாத, பிரத்தியேகமற்ற, திரும்பப் பெறக்கூடிய மற்றும் வரையறுக்கப்பட்ட உரிமத்தை Reddit உங்களுக்கு வழங்குகிறது (“வரையறுக்கப்பட்ட உரிமம் பெற்ற உரிமைகள்”). இந்த வணிக விதிமுறைகளை நீங்கள் மீறினால், வரையறுக்கப்பட்ட உரிமத்திற்கான உரிமைகளை இழப்பீர்கள்.
3.2 Reddit கோல்டு
Reddit கோல்டு என்பது ஒரு வகையான டிஜிட்டல் பொருளாகும், இதை நீங்கள் இந்த வணிக விதிமுறைகளின்படி (“கோல்டு்”) சேவைகளில் பர்ச்சேஸ் செய்யலாம், பெறலாம், பயன்படுத்தலாம். சேவைகள் மூலம் நீங்கள் கோல்டு பர்ச்சேஸ் செய்யும்போது, இந்த வணிக விதிமுறைகள், பயனர் ஒப்பந்தம் (பிரிவு 3 உட்பட) ஆகியவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவதற்கு உட்பட்டு, நீங்கள் கோல்டு பர்ச்சேஸ் செய்த கணக்கோடு மட்டுமே தொடர்புடையதாக இருக்கும் வகையிலும் எங்களது சேவைகளுக்குள்ளும் மட்டுமே பயன்படுத்துவதற்கான, மாற்ற முடியாத, பிரத்தியேகமற்ற, திரும்பப் பெறக்கூடிய, வரம்பிற்குட்பட்ட உரிமத்தை Reddit உங்களுக்கு வழங்குகிறது. குறிப்பிட்ட டிஜிட்டல் பொருட்கள் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி விருதுகள் உட்பட) அல்லது மூன்றாம் தரப்புக் கட்டணச் சேவைகளுக்காக நீங்கள் கோல்டை ரிடீம் செய்யலாம். இந்த வணிக விதிமுறைகள் மற்றும் (பொருந்தக்கூடிய வகையில்) முன்னோட்ட விதிமுறைகளில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் கோல்டைப் பயன்படுத்த நீங்கள் முயலக்கூடாது.
3.3 Reddit விருதுகள்
Reddit விருதுகள் என்பது ஒரு வகையான டிஜிட்டல் பொருளாகும். இதை நீங்கள் சேவைகள் மூலம் (உதாரணமாக, கோல்டு செலவழிப்பதன் மூலமாகவோ ஒரு விளம்பரத்தின்போதோ) பெற்று, மற்ற ரெடிட்டர்களின் பங்களிப்புகளை (உதாரணமாக, சேவைகளில் உள்ள பதிவுகள் மற்றும் கருத்துகள்) அங்கீகரிக்கவும் அவற்றுக்குப் பதிலளிக்கவும் அவர்களுக்கு வழங்கலாம் (“விருதுகள்”). சேவைகள் மூலம் நீங்கள் ஒரு விருதை வழங்கும்போது, இந்த வணிக விதிமுறைகள், பயனர் ஒப்பந்தம் (பிரிவு 3 உட்பட) ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை நீங்கள் தொடர்ந்து பின்பற்றுவதற்கு உட்பட்டு, அந்த விருதை பர்ச்சேஸ் செய்த கணக்கின் மூலம் மட்டுமே சேவைகளுக்குள் அதைப் பயன்படுத்தவும் மற்ற ரெடிட்டர்களுக்குப் பரிசளிக்கவும், மாற்ற முடியாத, பிரத்தியேகமற்ற, திரும்பப் பெறக்கூடிய மற்றும் வரையறுக்கப்பட்ட உரிமத்தை Reddit உங்களுக்கு வழங்குகிறது.
(பிற ரெடிட்டர்களிடமிருந்து) விருதுகள் பெறுபவர்கள்,( முன்னோட்ட விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ளபடி) குறிப்பிட்ட Reddit திட்டங்களில் பங்கேற்கத் தகுதிபெறலாம். மேலும் பொருந்தக்கூடிய Reddit திட்ட விதிமுறைகளுக்கு ( முன்னோட்ட விதிமுறைகளில்வரையறுக்கப்பட்டுள்ளபடி) இணங்க, சேவைகளுக்கான அவர்களின் பங்களிப்புகளின் அடிப்படையில் கோல்டு மற்றும்/அல்லது பணத்தைச் சம்பாதிக்கலாம். இருப்பினும், விருதுகளைப் பெறும் அனைவரும் Reddit திட்டங்களில் பங்கேற்கவும் நிதிப் பலனைப் பெறவும் தகுதிபெற மாட்டார்கள். இதன் விளைவாக, விருதுகளோ கோல்டோ பெறுநருக்கு இழப்பீடு அல்லது நிதி ஆதரவை வழங்குவதற்கான ஓர் உத்தரவாதமான வழிமுறையாகப் பயன்படுத்தப்படுவதற்காக நோக்கம் கொண்டவை அல்ல.
3.4 பரிசுகள் இறுதி
மற்ற பயனர்களுக்கு வழங்கப்பட்ட டிஜிட்டல் பொருட்கள் திருப்பித் தரப்படமாட்டாது (உதாரணமாக, நீங்கள் மற்றொரு பயனருக்குப் பரிசுகளை வழங்க கோல்டைப் பயன்படுத்தினால், அந்தப் பரிசுகளைத் திரும்பப் பெறவோ செலவழித்த கோல்டைத் திரும்பப் பெறவோ முடியாது).
3.5 முன்னோட்ட அம்சங்கள்
Reddit தனது முன்னோட்ட விதிமுறைகளின் கீழ் பிற டிஜிட்டல் பொருட்களையும் வழங்கக்கூடும். தற்போது என்னென்ன டிஜிட்டல் பொருட்கள் கிடைக்கின்றன (ஏதேனும் இருந்தால்) என்பதை அறிய, முன்னோட்ட விதிமுறைகளைப் பார்க்கவும்.
4. மூன்றாம் தரப்பு உரிமைகள்
இந்த வணிக விதிமுறைகளில் அல்லது (பொருந்தினால்) முன்னோட்ட விதிமுறைகளில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, டிஜிட்டல் பொருட்களில் (அவற்றுடன் தொடர்புடைய அவதார் கலைப்படைப்பு, பொருட்கள் அல்லது பிற கலைப்படைப்புகள் உட்பட, (ஒட்டுமொத்தமாக “டிஜிட்டல் பொருள் கலைப்படைப்பு”)) பயனர்களுக்கு எந்தவொரு சொத்துரிமை, தனியுரிமை, அறிவுசார் சொத்துரிமை, உடைமை அல்லது பண நலன்களும் கிடையாது.
சில டிஜிட்டல் பொருட்கள், Reddit மற்றும் மூன்றாம் தரப்பு உரிமதாரர்களின் கூட்டு முயற்சியாக இருக்கலாம். உங்கள் டிஜிட்டல் பொருளுடன் தொடர்புடைய ஏதேனும் டிஜிட்டல் கலைப்படைப்பில் மூன்றாம் தரப்பு அறிவுசார் சொத்துரிமைகள் (எடுத்துக்காட்டாக, ஒரு கிரியேட்டர் அல்லது பார்ட்னரிடமிருந்து உரிமம் பெற்ற அறிவுசார் சொத்துரிமைகள்) (“மூன்றாம் தரப்பு உரிமைகள்”) இருந்தால், நீங்கள் பின்வருபவற்றைப் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்:
-
டிஜிட்டல் பொருள் கலைப்படைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதைத் தவிர வேறு எந்த வகையிலும் எந்தவொரு மூன்றாம் தரப்பு உரிமைகளையும் பயன்படுத்துவதற்கான உரிமை உங்களுக்கு இருக்காது. மேலும் இது இந்த வணிக விதிமுறைகளில் அல்லது (பொருந்தக்கூடிய வகையில்) முன்னோட்ட விதிமுறைககளில் உள்ள உரிமம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது;
-
மூன்றாம் தரப்பு உரிமைகளின் உரிமையாளர் வழங்கிய உரிமத்தின் தன்மையைப் பொறுத்து, டிஜிட்டல் பொருள் கலைப்படைப்பை நீங்கள் பயன்படுத்துவதற்கான அனுமதியின் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை Reddit விதிக்க வேண்டியிருக்கலாம்; மற்றும்
-
மூன்றாம் தரப்பு உரிமைகள் காரணமாக டிஜிட்டல் கலைப்படைப்புகளைப் பயன்படுத்துவதில் கூடுதல் கட்டுப்பாடுகள் பொருந்தும் என Reddit உங்களுக்குத் தெரிவித்தால், நீங்கள் அந்தக் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.
அந்த டிஜிட்டல் கலைப்படைப்பு உரிமை மீறல் கோரிக்கைக்கு உள்ளானால் (அல்லது அவ்வாறு ஆகக்கூடும் என Reddit தீர்மானித்தால்), அதை மாற்றி அமைக்கவோ, அதைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெறவோ, அந்த டிஜிட்டல் கலைப்படைப்பிற்கான உங்கள் உரிமம் பெற்ற உரிமைகளை (பொருந்தக்கூடிய வகையில், அவதார் கலைக்கான உங்கள் உரிமம் பெற்ற உரிமைகள் உட்பட) முடிவுக்குக் கொண்டுவரவோ Reddit-க்கு உரிமை உண்டு.
5. கணக்கு இடைநிறுத்தம் அல்லது நிறுத்தம்
எங்களது பயனர் ஒப்பந்தம் , எங்களது Reddit விதிகள் ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளபடி, எங்களது சேவைகளுக்கான விதிகளையும், நீங்கள் பங்கேற்கும் தனிப்பட்ட சமூகங்களின் விதிகளையும் நீங்கள் பின்பற்றி நடக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அது இந்த வணிக விதிமுறைகளை மீறியதாகக் கருதப்பட்டு, சேவைகளிலிருந்தோ குறிப்பிட்ட சமூகங்களிலிருந்தோ தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ நீக்கப்படலாம் அல்லது உங்களது பதிவுகளும் கருத்துகளும் அகற்றப்படலாம். இதில் கட்டணச் சேவைகளின் அம்சங்களை நீங்கள் அணுகக்கூடிய அல்லது அவற்றிலிருந்து பயனடையக்கூடிய சமூகங்களும் அடங்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் கட்டணச் சேவைகளின் பலன்களை இழக்க நேரிடலாம். மேலும் இந்த இழப்பிற்காக நாங்கள் உங்களுக்கு இழப்பீடு வழங்க மாட்டோம்.
6. உங்கள் ஒப்புதல்கள்
சேவைகள் மூலம் கிடைக்கப்பெறும் ஏதேனும் சந்தா, டிஜிட்டல் பொருள், அல்லது பிற கட்டணச் சேவைகளை (ஒட்டுமொத்தமாக, “Reddit Econ பொருட்கள்”) நீங்கள் அணுகுவது, வாங்குவது, அல்லது பயன்படுத்துவது தொடர்பாக — நீங்கள் பின்வருபவற்றை உறுதிப்படுத்துகிறீர்கள், உத்தரவாதம் அளிக்கிறீர்கள், ஏற்றுக்கொள்கிறீர்கள், மற்றும் ஒப்புக்கொள்கிறீர்கள்:
-
நீங்கள் Reddit மற்றும் சமூக விதிகளுக்கு இணங்க வேண்டும் – எங்களது பயனர் ஒப்பந்தம், Reddit விதிகள், இந்த வணிக விதிமுறைகள் ஆகியவற்றிலும், நீங்கள் பங்கேற்கும் தனிப்பட்ட சமூகங்களின் விதிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள எங்கள் சேவைகளுக்கான விதிகளை நீங்கள் பின்பற்றி நடக்க வேண்டும்;
-
Reddit Econ பொருட்கள் என்பவை பணமோ சட்டப்பூர்வமான செலாவணியோ அல்ல – எந்தவொரு Reddit Econ பொருளும் பணமாகவோ அதிகாரப்பூர்வச் செலாவணியாகவோ கருதப்படாது. அதற்குப் பண மதிப்போ ரொக்கத்திற்கு இணையான மதிப்போ கிடையாது. அது வைப்புத் தொகைக் கணக்கோ பணக் கணக்கோ அல்ல. Reddit-இன் முன் அனுமதி இல்லாமல், எங்களது சேவைகளுக்கு வெளியே உள்ள எந்தவொரு நிஜ உலகப் பணம், ரொக்க மதிப்பு அல்லது பிற பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக அதை மாற்றிக்கொள்ளவோ மீட்டெடுக்கவோ முடியாது. மேலும், அதை ஒரு நாணயமாகவோ சொத்தாகவோ பயன்படுத்த முடியாது;
-
பெரும்பாலான Reddit Econ பொருட்களைப் பரிமாற்றம் செய்யவோ விற்கவோ முடியாது – இந்த வணிக விதிமுறைகளில் அல்லது (பொருந்தினால்) வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளுடன், முன்னோட்ட விதிமுறைகளின்படி, உங்கள் Reddit Econ பொருட்களை (உங்களின் வரையறுக்கப்பட்ட உரிம உரிமைகள் உட்பட) எங்கள் அனுமதியின்றி, சேவைகளுக்கு வெளியே அல்லது உங்கள் கணக்கிற்கு வெளியே விற்கவோ, வர்த்தகம் செய்யவோ, பண்டமாற்று செய்யவோ, மாற்றவோ, பரிமாற்றம் செய்யவோ, விற்பனைக்கு வழங்கவோ அல்லது வேறுவிதமாகப் பயன்படுத்தவோ கூடாது;
-
Reddit Econ பொருட்களுக்கான உங்கள் உரிமைகள் வரையறுக்கப்பட்டவை – இந்த வணிக விதிமுறைகளில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளைத் தவிர, Reddit Econ பொருட்களுக்கு ஈடாக வழங்கப்படும் அல்லது செலுத்தப்படும் எந்தவொரு பரிசீலனையையும் பொருட்படுத்தாமல், அவற்றில் உங்களுக்கு எந்தவொரு சொத்துரிமை, உரிமையியல் சொத்துரிமை, அறிவுசார் சொத்துரிமை, உரிமை, பண உரிமை, தலைப்பு அல்லது பிற தனியுரிமை நலன்களும் இல்லை. மாறாக, இந்த வணிக விதிமுறைகளின் கீழ் Reddit Econ பொருட்களை அணுகவும் பயன்படுத்தவும் உங்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது.
-
எந்தவொரு Reddit Econ பொருளையும் நீங்கள் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது – எங்கள் அனுமதியின்றியும், பொருந்தக்கூடிய வகையில், எந்தவொரு மூன்றாம் தரப்பு உரிமைகள் உரிமையாளரின் அனுமதியின்றியும், நீங்கள் எந்தவொரு Reddit Econ பொருளையும் (எந்தவொரு டிஜிட்டல் பொருள் கலைப்படைப்பு உட்பட) உரிமம் வழங்கவோ, துணை உரிமம் வழங்கவோ, விற்கவோ, மறுவிற்பனை செய்யவோ, மாற்றவோ, ஒப்படைக்கவோ, விநியோகிக்கவோ, வேறுவிதமாக வணிகரீதியாகப் பயன்படுத்தவோ, எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் (வர்த்தக முத்திரை, பிராண்டு அல்லது வழித்தோன்றல் படைப்பாக) கிடைக்கச் செய்யவோ கூடாது. எந்தவொரு Reddit Econ பொருளிலும் எந்தவொரு வர்த்தக முத்திரை, பதிப்புரிமை அல்லது பிற அறிவுசார் சொத்துரிமைகளைப் பதிவு செய்யவோ பதிவு செய்ய முயற்சிக்கவோ கூடாது. எந்தவொரு Reddit Econ பொருளையும் சந்தைப்படுத்தவோ விற்கவோ கூடாது. உங்கள் பொருட்கள் அல்லது சேவைகளையோ வேறு எந்த மூன்றாம் தரப்பினரின் பொருட்கள் அல்லது சேவைகளையோ சந்தைப்படுத்த அல்லது விற்க எந்தவொரு Reddit Econ பொருளையும் பயன்படுத்தக் கூடாது. Reddit அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பு உரிமைகள் உரிமையாளர்களிடமிருந்தும் வரும் எந்தவொரு வர்த்தக முத்திரைகள், விவரக்குறிப்புகள், உத்தரவாதங்கள், பொறுப்புத் துறப்புகள், எந்தவொரு அறிவுசார் சொத்து அல்லது தனியுரிமை அறிவிப்புகளை அகற்றவோ, நீக்கவோ, மாற்றவோ மறைக்கவோ கூடாது. மேலும் Reddit-இன் பெயர், வர்த்தக முத்திரைகள் அல்லது லோகோக்களைப் பயன்படுத்துவது உட்பட எந்த வகையிலும் நீங்கள் Reddit மூலம் அங்கீகரிக்கப்பட்டவர் அல்லது அதனுடன் தொடர்புடையவர் என்று கூறவோ மறைமுகமாகக் குறிப்பிடவோ கூடாது;
-
Reddit நிர்ணயித்த எந்த வரம்புகளையும் அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நீங்கள் மீறக் கூடாது – Reddit Econ பொருட்கள் அல்லது கட்டணச் சேவைகளின் பிற அம்சங்களை நீங்கள் சீர்குலைக்கவோ, தலையிடவோ, அதன் பாதுகாப்பை மீறவோ, அனுமதியற்ற அணுகலைப் பெற முயலவோ கூடாது (எந்தவொரு சாதனம், மென்பொருள் அல்லது நடைமுறையைப் பயன்படுத்துவது உட்பட). மேலும் எங்களால் நிர்ணயிக்கப்பட்ட எந்தவொரு கோரிக்கை, பர்ச்சேஸ், தகுதிநிலை, பொறுப்புமாற்றம், கட்டணம், பரிமாற்றம், பாதுகாப்பு அல்லது பிற வரம்புகளை மீறியோ எங்களது அனுமதியின்றி இந்த வணிக விதிமுறைகளை மீறியோ எந்தவொரு Reddit Econ பொருளையும் நீங்கள் பெறவோ அகற்றவோ கூடாது (எங்களது சேவைகளைச் சேதப்படுத்தும், அழிக்கும், சீர்குலைக்கும், முடக்கும், பலவீனப்படுத்தும், அதிக சுமையேற்றும், வேறு எந்த வகையிலும் தடைசெய்யும், தீங்கு விளைவிக்கும் எந்தவொரு வழியும் உட்பட). அதுமட்டுமல்லாமல் சேவைகளையும் Reddit Econ பொருட்களையும் பாதுகாக்க, அமல்படுத்தப்பட்ட எந்தவொரு பாதுகாப்புச் சாதனம், பாதுகாப்பு அல்லது தொழில்நுட்ப நடவடிக்கையையும் நீங்கள் கடந்து செல்லவோ, மீறவோ, தவிர்க்கவோ, அகற்றவோ, செயலிழக்கச் செய்யவோ, பலவீனப்படுத்தவோ, குறிநீக்கம் செய்யவோ, வேறுவிதமாகத் தவிர்க்கவோ கூடாது. ரெடிட்டர்களுக்குச் சேவைகளை இனிமையானதாக மாற்றுவதற்கும், பாட்கள், ரோபோக்கள், பார்சர்கள், ஸ்பைடர்கள் , ஸ்கிரிப்ட்கள், புரோகிராம்கள், நடைமுறைகள், ஸ்பேம், பிற தானியக்க வடிவங்கள், அத்துடன் மோசடி, சட்டவிரோதச் செயல்பாடு, எங்கள் பயனர் ஒப்பந்தம், Reddit விதிகள், இந்த வணிக விதிமுறைகள் ஆகியவற்றின் பிற மீறல்களைத் தடுப்பதற்குமே Reddit இந்த வரம்புகளையும் விதிமுறைகளையும் அமைக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்;
-
Reddit Econ பொருட்கள் அல்லது சேவைகளிலிருந்து நீங்கள் தரவைப் பிரித்தெடுக்கக் கூடாது – எங்கள் அனுமதியின்றி, Reddit Econ பொருட்கள் அல்லது சேவைகள் தொடர்பான (அல்லது அவற்றிலிருந்து பெறப்படும்) எந்தவொரு தரவு, உரை, அறிக்கைகள் அல்லது பிற மெட்டிரியல்களையும் (முழுமையாகவோ பகுதியாகவோ) நீங்கள் பிரித்தெடுக்கவோ, நகலெடுக்கவோ, பிரதியெடுக்கவோ, பதிவிறக்கவோ, தற்காலிகமாகச் சேமிக்கவோ, வெளியிடவோ, அனுப்பவோ, மீண்டும் உருவாக்கவோ, மாற்றவோ, விநியோகிக்கவோ, சேமிக்கவோ, பரப்பவோ, திரட்டவோ, வேறுவிதமாகப் பயன்படுத்தவோ கூடாது (வெப் ஸ்கிராப்பிங், வெப் ஹார்வெஸ்டிங் அல்லது பிற தரவுப் பிரித்தெடுக்கும் முறைகள் இதில் அடங்கும்);
-
நீங்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு, பொது அறிவைப் பயன்படுத்துவீர்கள் – மோசடியாகப் பெறப்பட்ட, திருடப்பட்ட, அனுமதியின்றி எடுக்கப்பட்ட அல்லது வேறுவிதமாக சட்டவிரோதமாகப் பெறப்பட்ட எந்தவொரு Reddit Econ பொருட்களையும் கையகப்படுத்தவோ அப்புறப்படுத்தவோ நீங்கள் இந்தச் சேவைகளைப் பயன்படுத்தவோ பயன்படுத்த முயற்சிக்கவோ கூடாது. சேவைகளுக்கு உள்ளேயோ வெளியேயோ எந்தவொரு Reddit Econ பொருளையும், எந்தவொரு சட்டவிரோத நோக்கத்திற்காகவும் (சந்தைக் கையாளுதல், பணமோசடி, மோசடி அல்லது வேறு எந்தக் குற்றம் உட்பட), எந்த வகையான பந்தயம் அல்லது சூதாட்டத்திற்காகவும், தடைசெய்யப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு எதிரான Reddit-இன் கொள்கை-இன் கீழ் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் பயன்படுத்தக் கூடாது. ஏதேனும் Reddit Econ பொருளைப் பர்ச்சேஸ் செயவ்தாலோ விற்பதாலோ எழும் வரிப் பொறுப்புகள் உட்பட, பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்குவீர்கள்; மற்றும்
-
இந்த வணிக விதிமுறைகளையும் ஒப்பந்தத்தையும் மீறும்படி வேறு யாரையும் ஊக்குவிக்கக்கூடாது – மேலே அல்லது இந்த வணிக விதிமுறைகளில் வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள், உத்தரவாதங்கள், ஒப்புதல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் எதையும் மீறுவதற்கு நீங்கள் எந்தவொரு மூன்றாம் தரப்பினரையும் தூண்டவோ தூண்ட முயற்சிக்கவோ கூடாது.
மேற்கண்ட விதிகளைப் பின்பற்றத் தவறினால், அது இந்தப் வணிக விதிமுறைகளை மீறியதாகக் கருதப்பட்டு, Reddit அல்லது குறிப்பிட்ட சமூகங்களிலிருந்து தற்காலிக/நிரந்தரத் தடை விதிக்கப்படலாம் அல்லது Reddit Econ பொருட்களுக்கான உங்கள் அணுகல் நீக்கப்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் Reddit Econ பொருட்களின் பலன்களை இழக்க நேரிடலாம், மேலும் இந்த இழப்பிற்காக நாங்கள் உங்களுக்கு இழப்பீடு வழங்க மாட்டோம்.
7. இந்த அபாயங்களை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்
எந்தவொரு Reddit Econ பொருளையும் நீங்கள் அணுகுவது, வாங்குவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக, பின்வரும் அபாயங்களை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள், மேலும் அவற்றால் ஏற்படும் அல்லது உருவாகும் பொறுப்பிலிருந்து Reddit-ஐப் பாதுகாப்பீர்கள்:
-
உங்கள் கணக்கிற்கான அணுகலை இழத்தல் – கூறப்படும் எந்தவொரு இழப்பிற்கும் உங்களுக்குப் பணத்தைத் திரும்ப அளிக்காமலோ வேறுவிதமாக ஈடுசெய்யாமலோ, நீங்கள் இந்த வணிக விதிமுறைகளை மீறுவீர்கள் அல்லது மீறியுள்ளீர்கள் என்று நாங்கள் சந்தேகித்தால் (உதாரணமாக, சேவைகளுக்கு உள்ளேயோ வெளியேயோ ஏதேனும் Reddit Econ பொருளை சட்டவிரோதமான நோக்கத்திற்காகப் பயன்படுத்துதல் உட்பட), Reddit சேவைகளைக் கட்டுப்படுத்தலாம், முடக்கலாம், அல்லது வேறுவிதமாக மாற்றலாம் அல்லது உங்கள் கணக்கை இடைநிறுத்தலாம் மற்றும்/அல்லது முடிவுக்குக் கொண்டுவரலாம். மேலும், உங்கள் கணக்கு இடைநிறுத்தப்பட்டாலோ முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலோ, சேவைகளில் உள்ள உங்கள் Reddit Econ பொருட்களை நீங்கள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ இழக்க நேரிடலாம் அல்லது அவற்றைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்;
-
ரெடிட்டர்களுடனான சிக்கல்கள் – மூன்றாம் தரப்புக் கட்டணச் சேவைகள் விற்பனையை மட்டுமே Reddit எளிதாக்குகிறது. மற்றபடி, இது ஒரு சந்தையை இயக்குவதில்லை, மேலும் நீங்கள் ரெடிட்டர்களுடன் அல்லது மூன்றாம் தரப்பினருடன் Reddit Econ பொருட்கள் அல்லது பிற பொருட்கள்/சேவைகளுக்காகச் செய்யும் எந்தவொரு பரிவர்த்தனைகளுக்கும் Reddit உதவுவதில்லை. மேலும் நீங்கள் ரெடிட்டர்கள் அல்லது மூன்றாம் தரப்பினருடன் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு (பரிவர்த்தனை சார்ந்த எந்தவொரு பிரச்சனைகள் உட்பட) Reddit எந்த வாக்குறுதியோ உத்தரவாதமோ வழங்குவதில்லை, அதுமட்டுமல்லாமல் அவற்றுக்கு Reddit பொறுப்பாகாது. அத்துடன், உங்கள் எதிர்த்தரப்பினரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கோ உங்கள் பரிவர்த்தனைக்கான காரணத்தை உறுதிப்படுத்துவதற்கோ அந்தப் பரிவர்த்தனை குறித்த உங்கள் திருப்தி அல்லது எதிர்த்தரப்பினரின் திருப்திக்கோ Reddit பொறுப்பேற்காது (இந்தப் பரிவர்த்தனைகளில் நீங்கள் முற்றிலும் உங்கள் சொந்தப் பொறுப்பிலேயே ஈடுபடுகிறீர்கள்);
-
சந்தைகள் தொடர்பான சிக்கல்கள் – Reddit Econ பொருட்களை விற்க, பரிமாற்றம் செய்ய அல்லது வேறுவிதமாகப் பயன்படுத்த அனுமதிக்கும் எந்தவொரு மூன்றாம் தரப்பு சந்தைகளையோ சேவைகளையோ Reddit அங்கீகரிக்கவோ பொறுப்பேற்கவோ இல்லை. மேலும் அத்தகைய சந்தைகள் அல்லது சேவைகளை நீங்கள் அனுமதியின்றிப் பயன்படுத்துவது இந்த வணிக விதிமுறைகளின் மீறலாகும்; மற்றும்
-
Reddit Econ பொருட்களில் வரவிருக்கும் மாற்றங்கள் – உங்களுக்கு ஏற்படும் எந்தவொரு இழப்புக்கும் பணத்தைத் திருப்பிச் செலுத்தாமலோ வேறுவிதமாக ஈடுசெய்யாமலோ, Reddit தனது விருப்பப்படி Reddit Econ பொருட்களில் மாற்றங்களைச் செய்யலாம். அந்த மாற்றங்கள் சில அல்லது அனைத்து Reddit Econ பொருட்களின் மதிப்பு அல்லது பயன்பாட்டையோ சில Reddit Econ பொருளைப் பெறும் திறனையோ பாதிக்கக்கூடும் என்றாலும் (உதாரணமாக, மற்றவற்றைப் பயன்படுத்தத் தேவைப்படும் Reddit Econ பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம். மேலும் எந்தவொரு Reddit Econ பொருளையும் மீட்பதற்கான கட்டுப்பாடுகள் எந்த நேரத்திலும் விதிக்கப்படலாம்), அந்த மாற்றங்கள் சில அல்லது அனைத்து Reddit Econ பொருட்களையும் அதிகமாகவோ, குறைவாகவோ பொதுவானதாகவோ, விரும்பத்தக்கதாகவோ, பயனுள்ளதாகவோ, செயல்பாட்டுக்குரியதாகவோ மாற்றக்கூடும். எந்தவொரு குறிப்பிட்ட காலத்திற்கும் Reddit Econ பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்பதற்கு Reddit உத்தரவாதம் அளிக்கவில்லை. மேலும் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட முழு அளவிற்கு, எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது காரணமில்லாமலும், தனது முழுமையான விருப்பப்படி, உங்களுக்கு முன்னறிவிப்போ பொறுப்போ இன்றி, எந்தவொரு Reddit Econ பொருளையும் கட்டுப்படுத்த, ஒழுங்குபடுத்த, மாற்றியமைக்க, இடைநிறுத்த, அகற்ற, நிறுத்த, வழங்குவதை நிறுத்த அல்லது அதற்கான ஆதரவைத் துண்டிக்க Reddit-க்கு உரிமை உண்டு. மேலும், நீங்கள் எந்தவொரு Reddit Econ பொருட்களைச் சேகரிக்கும்போது, சேவைகளில் அவை தொடர்ந்து கிடைக்கும் என்பதையோ எதிர்காலத்தில் அவற்றின் தரம் அல்லது மதிப்பு தக்கவைக்கப்படும் அல்லது உயரும் என்பதையோ நீங்கள் நம்பியிருக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள்.
Reddit Econ பொருட்களை அணுகுவதற்கும், பயன்படுத்துவதற்கும், வாங்குவதற்கும் மேற்கூறிய அபாயங்களை நீங்கள் ஏற்றுக்கொள்வது ஒரு நிபந்தனை என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். இந்த அபாயங்களை ஏற்க நீங்கள் சம்மதிக்கவில்லை என்றால், எந்தவொரு Reddit Econ பொருளையும் அணுகவோ, வாங்கவோ பயன்படுத்தவோ உங்களுக்கு எங்கள் அனுமதி இல்லை.
8. மற்றவை
எங்களது பயனர் ஒப்பந்தம் இந்த குறிப்பின் மூலம் இந்த வணிக விதிமுறைகளில் இணைக்கப்பட்டு அதன் ஒரு பகுதியாக்கப்படுகிறது. மேலும், பயனர் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் இந்த வணிக விதிமுறைகளுடன் எந்த அளவுக்கு முரண்படுகிறதோ அந்த அளவுக்கு Reddit Econ பொருளுக்கான உங்களது அணுகல், பர்ச்சேஸ் மற்றும் பயன்பாட்டைப் பொறுத்தவரை இந்த வணிக விதிமுறைகளே முதன்மையாகச் செல்லுபடியாகும்.